அரகலய போராட்டத்தின் பின்னணியில் ஜே.வி.பி: அம்பலப்படுத்தும் முன்னாள் எம்.பி
இலங்கையில் கடந்த 2022 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட காலிமுகத்திடல் போராட்டத்தின் பின்னணியில் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி செயல்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலக (Nandana Gunathilake) குற்றம் சாட்டியுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) ஆதரவாக இடம்பெற்ற இயலும் சிறிலங்கா கூட்டத்தில் கலந்து உரையாற்றும் போதே, நந்தன குணதிலக இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
வன்முறை
வன்முறை தொடர்பான கசப்பான வரலாற்றை கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணி, கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற காலிமுகத்திடல் போராட்டத்தின் போது வன்முறையை கட்டவிழ்த்து விட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலக சுட்டிக்காட்டியுள்ளார்.
காலிமுகத்திடல் போராட்டத்தில் பல்வேறு குழுவினர் தனித்தனியாக பங்கேற்றிருந்தாலும், இந்த குழுக்களின் பின்னணியில் மக்கள் விடுதலை முன்னணி இருந்து செயல்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
போராட்டத்தின் பின்னணி
அந்த கட்சியின் உறுப்பினர்களான சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் கே.டி. லால்காந்த ஆகியோர் குறித்த நடவடிக்கையை முன்னின்று வழிநடத்தியதாகவும் இதன் மூலம் மக்கள் விடுதலை முன்னணியின் வரலாறு மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த பின்னணியில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றாலும், தோல்வியை எதிர்நோக்கினாலும் இலங்கையில் வன்முறை வெடிக்குமென நந்தன குணதிலக எச்சரித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
