மலையக மக்களிடம் மன்னிப்பு கோருங்கள் : ஜே.வி.பியை வலியுறுத்தும் ரணில்
தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியுரிமை வழங்குவதை எதிர்த்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) அந்த சமூகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) கோரிக்கை விடுத்துள்ளார்.
“ஐ.தே.க சார்பில் நான் உரையாற்றும் முதலாவது சந்திப்பு இதுவாகும். நாங்கள் வேறு இடங்களில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டாலும், நுவரெலியாவில்(Nuwara Eliya) யானைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று ஜீவன் தொண்டமான் வலியுறுத்தினார்” என கொட்டகலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் தெரிவித்தார்.
குடியுரிமை வழங்குவதை கடுமையாக எதிர்த்த விஜேவீர
"அந்த நேரத்தில், தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்ட போது, ஜே.வி.பி. தலைவர் ரோஹண விஜேவீர(Rohana Wijeweera) அதை கடுமையாக எதிர்த்தார்," என்று அவர் நினைவு கூர்ந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் (UNP) மலையக சமூகத்திற்கும் இடையிலான நெருங்கிய உறவுகளை அவர் நினைவு கூர்ந்தார். 1947 ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ச்சியாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதுடன், இந்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு எப்போதும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
சிறிமாவோ மற்றும் இந்திரா காந்தி உடன்படிக்கை
1986 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க(Sirimavo Bandaranaike) மற்றும் இந்திரா காந்தி (Indira Gandhi)ஆகியோருக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின் கீழ், இந்தியாவிலோ அல்லது இலங்கையிலோ குடியுரிமை இல்லாதவர்களுக்கு இலங்கை குடியுரிமை வழங்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
"இந்தியாவிலோ அல்லது இலங்கையிலோ குடியுரிமை இல்லாத அனைவருக்கும் நாங்கள் குடியுரிமை வழங்கினோம்" என்று அவர் குறிப்பிட்டார்.
அந்த நேரத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை ஜேவிபி மறுத்ததை விமர்சித்த அவர், “அவர்களுக்கு வாக்குரிமை வழங்குவதை எதிர்த்த ஜேவிபிக்கு அவர்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்?” என்றும் கேள்வி எழுப்பினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |