புலம்பெயர் தமிழ் இளையோருக்கு அரியதோர் வாய்ப்பு
பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் இளையோருக்காக 2022ஆம் ஆண்டு பிரம்மாண்டமான முறையில் நடாத்தப்படவுள்ள "காப்போம் தமிழ்'' தமிழ் மொழி மற்றும் கலைத்திறன் போட்டித்தொடரின் அறிமுக விழா கடந்த ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஒக்ஸ்போர்டிலுள்ள உலகத்தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் பொது மக்களின் பங்களிப்புடன் நடைபெற்றது.
பல தமிழ் ஆர்வலர்களும் புத்திஜீவிகளும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில், பலரின் சிறப்புரைகளும் இளையோரின் பங்களிப்புடன் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறின.
பல இளையோரின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில் ''காப்போம் தமிழ்'' போட்டித்தொடர் பற்றிய பல்வேறு விடயங்கள் குறித்து ஏற்பாட்டு குழுவினரால் விளக்கமளிக்கப்பட்டது. குறிப்பாக காப்போம் தமிழ் செயற்றிட்டத்தின் இலக்கு மற்றும் நோக்கம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டன.
''உலகின் தாய் மொழியாம் ஒப்பிலா எம் தமிழ் மொழியின் தொன்மையையும் ஆழத்தையும் எம் இளையோர் அறிந்து - தெளிந்து பெருமிதத்துடன் கற்று அவர்களினூடு காலங்காலமாய் எம் தமிழ் மொழியையும் கலைகளினையும் பண்பாட்டையும் தழைத்தோங்கச்செய்வதே "காப்போம் தமிழ்" கொண்ட தலையாய இலக்கு'' எனவும், ''தமிழ் மொழித்திறன் மற்றும் கலைத்திறன் போட்டிகளை ஒவ்வோர் ஆண்டும் பிரம்மாண்டமான முறையில் எம் இளையோருக்காக நடாத்துவதன் மூலம் அவர்களுக்கு தமிழ் மொழியின் பால் ஈர்ப்பை ஏற்படுத்தி தமிழை கசடறக் கற்க வைப்பதன் மூலம் அவர்களை தமிழால் ஒன்றிணைப்பதுவே "காப்போம் தமிழ்" கொண்ட உயரிய நோக்கம்'' எனவும் அறிவிக்கப்பட்டது.
அத்துடன் வெற்றியாளர்களுக்கு £50,000 க்கும் அதிகமான பணப்பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படவிருப்பதுடன் வெற்றியாளர்கள் நட்சத்திரங்களாகவும் அறிவிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டது. இளையோரின் தனித்திறனை வெளிக்கொணரும் வகையில் பேச்சு, பாடல் மற்றும் நடனம் ஆகிய பிரிவுகளில் நான்கு சுற்றுக்களாக போட்டிகள் நிகழவுள்ளன.
ஒவ்வொரு போட்டிப் பிரிவுகளும் ஆறு வயதெல்லைகளில் நடைபெறுவதுடன் ஒவ்வொரு வயதெல்லைகளிளும் வெற்றிபெறும் போட்டியாளர்களுக்கு முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறுவோருக்கு முறையே £1000, £750 மற்றும் £500 பணப்பரிசில்களுடன், வெற்றிக்கிண்ணமும் சான்றிதழும் வழங்கப்படுவதுடன் நான்காம் இடம் முதல் பத்தாம் இடம் வரை பெரும் போட்டியாளர்களுக்கு தலா £100 பணப்பரிசிலுடன் சான்றிதழும் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது.
முதலாம் சுற்று, இரண்டாம் சுற்று, அரையிறுதி மற்றும் இறுதிச்சுற்று எனும் வகையில் நான்கு சுற்றுக்களாக நடைபெறும் இந்த போட்டித்தொடர் பற்றிய அனைத்து விபரங்களும் www.KaappomThamizh.com எனும் இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டது.
இந்த போட்டித்தொடரில் பங்குபற்ற விரும்பும் இளையோர் www.KaappomThamizh.com அல்லது www.SaveTamil.com எனும் இணைய முகவரிகளினூடாக ''காப்போம் தமிழ்'' இணைய தளத்தினூடு தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் எனவும் பிரித்தானியாவிலுள்ள 3 வயது முதல் 20 வயது வரையான அனைத்து இளையோரும் இந்தப் போட்டிகளில் பங்கு பற்ற இயலும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.









