கிராமிய விவசாயிகளுக்கு தானியம் மற்றும் சந்தை வாய்ப்பினை பெற்றுக் கொடுக்க தீர்மானம் : காதர் மஸ்தான்
கிராமியப் பகுதிகளில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு, தானிய வகைகளைப் பயிரிடுவதற்கு அவசியமான விதைகளை வழங்குவதுடன் அவற்றுக்கான சந்தை வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
அதிபர் ஊடக மையத்தில் நேற்று(05) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
அந்நியச் செலாவணியைச் சேமிக்கும் நோக்கம்
“தானிய இறக்குமதிக்காக அரசாங்கம் செலவழிக்கும் அந்நியச் செலாவணியைச் சேமிக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிராமிய பிரதேசங்களில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு குறிப்பாக உழுந்து, பயறு ஆகிய தானிய வகைகளை பயிரிடுவதற்கு அவசியமான விதைகளை வழங்குவதுடன் அவற்றுக்கான சந்தை வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
இதன் மூலம் மன்னார் மாவட்டத்தில் சுமார் 950 மெட்ரிக் டன் பயறு விளைச்சலைப் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது.
இதனால் பயறு இறக்குமதிக்கு செலவிடும் அந்நியச் செலாவணியை சேமிக்க முடிந்துள்ளது.
இந்த வேலைத்திட்டத்தை நாட்டில் பரவலாக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், ஆடு வளர்ப்புக்கு அவசியமான உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது.” என்றார்.