வசீம் தாஜுதீன் விசாரணையில் அதிரடி திருப்பங்கள் - கஜ்ஜாவின் மகனின் சர்ச்சைக்குரிய அறிவிப்பு
ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் இறந்த வாகனத்தின் பின்னால் பயணித்த சந்தேகத்திற்கிடமான வாகனத்தில் கஜ்ஜா என்ற அருண விதானகமகே இருந்ததாக அவரது மனைவி தெரிவித்த கருத்தை கஜ்ஜாவின் மூத்த மகன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
விசாரணையுடன் தொடர்புடைய சிசிடிவி காட்சிகளை கஜ்ஜாவின் சகோதரர்கள் மற்றும் சகோதரியிடம் காட்டி அந்த காணொளியில் இருப்பவர் தமது தந்தை தானா என அவர்களிடம் ஏன் காவல்துறையினர் கேட்கவில்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்
நேற்று (01) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே கஜ்ஜாவின் மூத்த மகன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தந்தை பேருந்து நடத்துனர்
மித்தெனியவில் சமீபத்தில் கொலை செய்யப்பட்ட கஜ்ஜா என்ற அருண விதானகமகே, 2012 ஆம் ஆண்டு ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் இறந்த வாகனத்தின் பின்னால் பயணித்த சந்தேகத்திற்கிடமான வாகனத்தில் இருந்தமையை அவரது மனைவி உறுதிப்படுத்தியிருந்ததாக பதில் காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் மினுர செனரத் நேற்று (30) தெரிவித்தார்.
இந்நிலையில் கஜ்ஜாவின் மூத்த மகன் இந்துவர விதானகமகேவும் இந்த சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்தார்.
எனது தந்தைக்கும் இந்த கொலைச் சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. வசீம் தாஜுதீனின் மரணம் நிகழ்ந்த 2012 ஆம் ஆண்டில் தந்தை பேருந்து நடத்துனராகவே செயற்பட்டிருந்தார்.
எனவே அந்த கொலையுடன் அவர் தொடர்பு பட்டிருக்க முடியாது.
வங்கிக் கணக்கிற்கு ஒரு தொகை பணம்
இதேவேளை தமது தந்தை கொலை செய்யப்பட்டதன் பின்னர் தமது தயாரின் வங்கிக் கணக்கிற்கு ஒரு தொகை பணம் வைப்பிலிடப்பட்டிருந்தது.
அது தொடர்பில் தாம் தமது தாயாரிடம் வினவிய போதே, பெக்கோ சமன் என்பவரால் அந்த பணம் வழங்கப்பட்டதை தாம் அறிந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த சம்பவம் தொடர்பில் உரிய வகையில் விசாரணை வேண்டும் எனவும் கஜ்ஜாவின் மூத்த மகன் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
