தமிழ், முஸ்லிம் மக்களிடையே பிளவு ஏற்பட்டது ஏன்? உண்மையை வெளியிட்ட கூட்டமைப்பு எம்.பிக்கு பாராட்டு
ஆயுதம் தாங்கிய போராளிகள் மேற்கொண்ட செயற்பாடு காரணமாக தான் முஸ்லிம் தமிழ் மக்களுக்கு இடையே பிளவு ஏற்பட்டது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன் கூறியிருப்பதை பாராட்டுவதாக என உலமா கட்சி தலைவர் முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள உலமா கட்சி காரியாலயத்தில் நேற்று(14) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
1980க்கு முன்னர் வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ் முஸ்லிம் மக்கள் மிக ஒற்றுமையுடனே வாழ்ந்து வந்தார்கள்.1980 பின்னர் தமிழ் ஆயுதக்குழுக்கள் முஸ்லிம்கள் மீது ஆயுதங்களினால் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தன.
இதனால் அவர்கள் மீது முஸ்லிம்களுக்கு பயம் ஏற்பட்டிருந்தது. இந்த பயத்தினை போக்குவதற்காக தான் முஸ்லிம் தரப்பிலும் ஆயுதம் ஏந்தியிருந்தார்கள். இதனை விட முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும் இருந்தார்கள். எனினும் வட மாகாணத்தில் 1 இலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம் மக்கள் புலிகளினால் விரட்டியடிக்கப்பட்ட கொடுமைகளையும் கண்டோம்.
ஆகவே கலையரசன் கூறுவதைப் போன்று ஆயுதம் தாங்கிய போராளிகள் மேற்கொண்ட செயற்பாடு காரணமாக தான் முஸ்லிம் தமிழ் மக்களுக்கு இடையே பிளவு ஏற்பட்டது.
எனவே இந்த நேரத்தில் அவர் குறித்த உண்மையை கூறியதற்காக பாராட்டுகின்றோம். எங்களை பொறுத்தவரை தமிழ் முஸ்லிம் ஒற்றுமையினையை விரும்புகின்றோம் என குறிப்பிட்டார்.