இலங்கை அணி வீரருக்கு குவியும் பாராட்டு மழை
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள இலங்கைகிரிக்கெட் அணி வீரர் திமுத் கருணாரத்னவை(dimuth karunaratne) ஐசிசி(icc) வெகுவாக பாராட்டியுள்ளது.
இலங்கை(sri lanka) மற்றும் அவுஸ்திரேலிய(australia) அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்தத் தொடரை ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி, 2-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் தனது 100-வது டெஸ்ட் போட்டியை நிறைவு செய்த இலங்கை அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான திமுத் கருணாரத்ன, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
ஐசிசியின் பாராட்டு மழை
இலங்கை அணிக்காக இத்தனை ஆண்டுகள் சிறப்பாகவும், மிகுந்த அர்ப்பணிப்புடனும் விளையாடிய திமுத் கருணாரத்னவை ஐசிசி வெகுவாகப் பாராட்டியுள்ளது.இது தொடர்பாக ஐசிசி தலைவர் ஜெய் ஷா பேசியதாவது:
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு துடுப்பாட்ட வீரராக திமுத் கருணாரத்ன மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இலங்கை அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள 7-வது வீரர் என்ற பெருமை அவரைச் சேரும். அணிக்காக மிகுந்த அர்பணிப்புடன் செயல்பட்டவர். டெஸ்ட் போட்டியின் ரசிகர்கள், திமுத் கருணாரத்னவை கண்டிப்பாக மிஸ் செய்வார்கள். ஐசிசியின் சார்பாக அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
அணித்தலைவராகவும் ஜொலிப்பு
இலங்கை அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள திமுத் கருணாரத்ன, 7,222 ஓட்டங்கள் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் அவரது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை 244 ஆகும்.
இலங்கை அணிக்காக 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 1,316ஓட்டங்கள் குவித்துள்ளார். 2019 மற்றும் 2023 ஆம் ஆண்டு கால இடைவெளியில் இலங்கை அணியை 30 டெஸ்ட் போட்டிகளில் அணித்தலைவராக கருணாரத்ன வழிநடத்தியுள்ளார். அதில் 12 போட்டிகளில் வெற்றியும், 12 போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளார்.
திமுத் கருணாரத்ன அவரது 100-வது டெஸ்ட் போட்டியின் முதல் மற்றும் இரண்டாவது இனிங்ஸ்களில் முறையே 36 மற்றும் 14 ஓட்டங்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |