ஒரு மணி நேரம்தான் வைத்தியசாலையில்! பரிசோதனையில் சிக்கிய கஸ்ஸப்ப தேரர்
கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தின்போது ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர், மேலதிக மருத்துவக் கண்காணிப்புக்காக வைத்தியசாலையில் தங்கியிருக்க மறுத்து வெளியேறியுள்ளார்.
இதனை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சம்பத் இந்திக்க குமார உறுதிப்படுத்தியுள்ளார்.
சம்பவத்தைத் தொடர்ந்து, இரவு சுமார் 8.30 மணியளவில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்றுள்ளார்.
கதிரியக்கப் பரிசோதனை
இதன்போது மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்து, கதிரியக்கப் பரிசோதனைகள், அல்ட்ராசவுண்ட் பரிசோதனை மற்றும் இரத்தப் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்தப் பரிசோதனைகளில் உடலில் ஏதேனும் பாதிப்பு அல்லது அசாதாரண நிலை இருப்பதற்கான அறிகுறிகள் கண்டறியப்படவில்லை என வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தனது தலையில் தாக்கப்பட்டதாக பலாங்கொடை கஸ்ஸப தேரர் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, அவரை அவசர சிகிச்சை விடுதியில் அனுமதித்து, முழுமையான மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துவதுடன் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பிலும் வைத்திருக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
எனினும், மேலதிக சிகிச்சை தேவையில்லை எனத் தெரிவித்த தேரர், மருத்துவ ஆலோசனையை ஏற்க மறுத்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.
மேலதிக சிகிச்சை தேவையில்லை
இரவு 8.30 மணியளவில் வைத்தியசாலைக்கு வந்த அவர், சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர், அதாவது இரவு 9.30 மணியளவில் அங்கிருந்து வெளியேறியதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பரிசோதனைகளில் அசாதாரண அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படாத போதிலும், தலையில் தாக்கப்பட்டதாகத் தேரர் தெரிவித்ததன் காரணமாக மேலதிக மருத்துவப் பரிசோதனைகளும் கண்காணிப்பும் அவசியம் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த ஆலோசனையைத் தேரர் ஏற்க மறுத்து, மேலதிக சிகிச்சை தேவையில்லை எனக் கூறி வைத்தியசாலையிலிருந்து வெளியேறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |