சாகும்வரை உண்ணாவிரதம்: ஞானசார தேரருக்காக கஸ்ஸப்ப தேரர் எடுத்த முடிவு
ருவன்வெலிசாயாவிற்கு அருகில் கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட மூன்று பௌத்த பிக்குகள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது .
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் இந்த உண்ணாவிரதப் போராட்டம் இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
தங்களின் போராட்டத்தை அரசாங்க அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவைப் பேச்சாளர் கேலியாகவும், அலட்சியமாகவும் பார்ப்பதாக ஊடகங்கள் மூலம் வெளிப்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தண்ணீர் கூட வழங்க வேண்டாம்
கலகொட அத்தே ஞானசார தேரரை நிபந்தனையின்றி விடுதலை செய்வதற்கு மகாநாயக்க தேரர்கள் தலையிட வேண்டும், அனுராதபுர புனித பூமியை இந்தியமயமாக்கும் மற்றும் சர்வமதமயமாக்கும் வகையில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எள கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை தாங்கள் உணவு மட்டுமன்றி, ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தப் போவதில்லை என்றும் கஸ்ஸப்ப தேரர் தெரிவித்துள்ளார் .
தாங்கள் மிகவும் அமைதியான முறையில் அமர்ந்திருக்கும் போது, காவல்துறையினர் வந்து தாக்குதல் நடத்துவதாகவும், அநாகரிகமாக நடந்து கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று மதியம் 12 மணிக்குப் பிறகு தாங்கள் உணவு எதனையும் உட்கொள்ளவில்லை என்றும், இந்த நிமிடம் முதல் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்தப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
எனவே, அங்கு வரும் மக்கள் தங்களுக்கு உணவு, பானங்கள் அல்லது ஒரு குவளைத் தண்ணீர் கூட வழங்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |