'மரியாதை செலுத்துவதில்' பிரச்சினை : களனி பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே மோதல்
களனி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் நான்காம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஏழு மாணவர்கள் கிரிபத்கொட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் நான்காம் ஆண்டு மாணவர்கள் மூவரும், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நால்வரும் அடங்குவர்.
சிரேஷ்ட மாணவர்களுக்கு மரியாதை
பல்கலைக்கழக உணவகத்திற்கு அருகில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதுடன், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நான்காம் ஆண்டு சிரேஷ்ட மாணவர்களுக்கு உரிய மரியாதை வழங்காததே இந்த அமைதியற்ற நிலைக்குக் காரணம் என காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் இரு தரப்பு மாணவர்களும் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் காவல்துறையினர் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
மோதலை சமரசம் செய்ய இரு தரப்பினரும் ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்ததால் சந்தேகநபரான மாணவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படும் வரை காவல்துறை தடுப்புக்காவலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மாணவர் மோதல் தொடர்பில் மேலதிக விசாரணை
இருப்பினும், தடுப்புக்காவலில் இருந்தபோது இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட கலந்துரையாடலுக்குப் பிறகு இந்த தகராறை சமரசம் செய்ய அவர்கள் ஒப்புக்கொண்டதுடன், அது குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவித்த பின்னர் சம்பந்தப்பட்ட ஏழு மாணவர்களும் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கிரிபத்கொட காவல் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான காவல்துறை பரிசோதகர் கே. ஏ. பி. அபேரத்னவின் பணிப்புரையின் பேரில், பல்வேறு முறைப்பாடுகள் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி, காவல்துறை பரிசோதகர் லியனகே உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் குழுவினால் இந்த மாணவர் மோதல் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 6 Evening