சமூக செயற்பாட்டாளர் கெலும் ஜயசுமன பிணையில் விடுவிப்பு!
முகநூல் ஊடாக வடக்கில் மாவீரர் வைபவங்கள் நடப்பதாக பொய்யான தகவலை பரப்பிய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சமூக ஆர்வலர் கலும் ஜயசுமனவை விடுதலை செய்யுமாறு கொழும்பு (Colombo) நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான முறைப்பாடு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே (Thilina Gamage) முன்னிலையில் இன்று (04.12.2024) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில் முன்னிலையான அதிகாரிகள் நீதிமன்றத்தில் சாட்சியமளித்ததுடன், பிரான்ஸில் உள்ள பெண் ஒருவரின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட விடுதலைப் புலிகளின் தடை செய்யப்பட்ட சின்னங்கள் அடங்கிய புகைப்படத்தை சந்தேகநபர் தரவிறக்கம் செய்து மீள்பதிவு செய்துள்ளார்.
குற்றப் புலனாய்வு
இதன் மூலம் பொது அமைதி மற்றும் நாடுகளுக்கிடையிலான நல்லிணக்கம் சீர்குலைந்துள்ளதாக தெரிவித்த அதிகாரிகள், வடக்கில் அவ்வாறானதொரு விழா நடத்தப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், விசாரணைகள் நிறைவடையாத நிலையில், சந்தேக நபரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் கேள்வியொன்றை முன்வைத்த நீதவான், இந்தச் செயலினால் பொது ஒழுங்கு மீறப்பட்டதை உறுதிப்படுத்தும் வாக்குமூலங்களைப் பதிவு செய்து நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளீர்களா எனக் கேட்டார்.
சரீரப் பிணை
இதற்குப் பதிலளித்த குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், அவ்வாறான வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக ஆதாரமின்றி சந்தேகநபரை எவ்வாறு விளக்கமறியலில் வைக்க முடியும் என வினவிய நீதவான், ஆதாரமின்றி சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
இதன்படி, சந்தேகநபரை இரு சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், முறைப்பாட்டை ஏப்ரல் 3ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறும் உத்தரவிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |