யாழ்.கொடிகாமத்தில் பெருமளவான கேரள கஞ்சா மீட்பு: இருவர் கைது
யாழ்ப்பாணம் (Jaffna) - கொடிகாமம் பகுதியில் உள்ள வீடொன்றில் காவல்துறையினரால் நடத்தப்பட்ட சோதனையில் 87 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு எழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் காரொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் மற்றும் யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சூரிய பண்டாரவின் வழிகாட்டலில் சாவகச்சேரி காவல்துறையினரால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கஞ்சா விநியோகம்
இந்தநிலையில், இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய சங்குப்பிட்டி பாலத்தில் காவல்துறையினர் நடத்திய சோதனையின்போது காருக்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 500 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதன்போது, இலங்கை போக்குவரத்துச் சபையில் கடமையாற்றும் வவுனியாவைச் சேர்ந்த 47 வயதானவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கொடிகாமத்தில் வசிக்கும் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் ஒருவரே தனக்கு கஞ்சா விநியோகம் செய்ததாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர் தப்பியோட்டம்
இதனையடுத்து கொடிகாமத்தில் உள்ள வீடொன்று இன்று அதிகாலை சுற்றிவளைக்கப்பட்டபோது அங்கிருந்து 87.67 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.

இதன்போது, சந்தேக நபர் தப்பியோடிய நிலையில் வீட்டில் இருந்த சந்தேக நபரின் தாயார் கைது செய்யப்பட்டார்.
விளக்கமறியல்
இதனையடுத்து கைதான இருவரும் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் இருவரையும் ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், தப்பியோடிய சந்தேகநபரை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..!
3 நாட்கள் முன்