கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் தலைவர் : வெளியாகும் பரபரப்பு தகவல்கள்
கனடாவில் வைத்துக் கொலை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் இன் கொலையுடன் சம்மந்தப்பட்டவர்கள் தொடர்பான விடயங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, ஹர்தீப் சிங் நிஜ்ஜரைக் கொலை செய்த நபர்கள் இன்னமும் கனடாவில்தான் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த ஜூன் மாதம் 18ஆம் திகதி சீக்கிய அமைப்பான காலிஸ்தான் அமைப்பின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கனடாவில் கொல்லப்பட்டார்.
பின்னணியில் இந்தியா
இவரது கொலையின் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக அறிவித்த நிலையில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவிலும் பெரும் விரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், நிஜ்ஜரை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர்கள் இன்னமும் கனடாவில்தான் இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
உறவுகளில் விரிசல்
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நிஜ்ஜரை இரண்டு பேர் சுட்டுக்கொன்றதாகவும் அவர்கள் கனடாவை விட்டு வெளியேறவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அந்த இருவரையும் காவல்துறையினர் பல மாதங்களாக கண்காணித்துவருவதாகவும், அவர்கள் விரைவில் கனடா காவல்துறையினரால் கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கொலை விவகாரத்தால் இந்தியா கனடாவிற்கிடையிலான தூதரக உறவுகளில் விரிசல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |