கிளிநொச்சியில் தபால் உத்தியோகத்தரை அச்சுறுத்தி வாக்குச் சீட்டுகள் பறிமுதல்
கிளிநொச்சி(kilinochchi) தபால் நிலையத்தை சேர்ந்த தபால் உத்தியோகத்தர் ஒருவரை அச்சுறுத்தி முப்பத்தி நான்கு குடும்பங்களின் வாக்குச் சீட்டுகளை திருடிய நபர் ஒருவர் நேற்று (10) கைது செய்யப்பட்டதாக கிளிநொச்சி காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் அம்பாள் நகர், சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய இராசலிங்கம் மனோகரன் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
தபால் உத்தியோகத்தருடன் வாக்குவாதம்
கிளிநொச்சி தபால் நிலையத்தைச் சேர்ந்த தபால் உத்தியோகத்தர் ஒருவர் வாக்குச் சீட்டு விநியோகத்தில் ஈடுபட்டிருந்த போது, சந்தேக நபரின் தாயும் சகோதரியும் வாக்குச் சீட்டுகளைப் பெற்றிருந்த போதும் உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு கிடைக்கவில்லை எனத் தெரிவித்து தபால் உத்தியோகத்தருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
வாக்குச்சீட்டுகள் பறிமுதல்
பின்னர் சந்தேக நபர் தபால் உத்தியோகத்தரை அச்சுறுத்தி அவரிடம் இருந்து முப்பத்தி நான்கு குடும்பங்களுக்கு சொந்தமான வாக்கு சீட்டுகளை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கிளிநொச்சி காவல்நிலையத்தில் முறைப்பாடு
கிளிநொச்சி காவல்நிலையத்தில் அளித்த முறைப்பாட்டின் பிரகாரம், சந்தேகநபரை கைது செய்த காவல்துறை அதிகாரிகள், சந்தேகநபரின் வீட்டுக்குப் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாக்குச் சீட்டுகளைக் கண்டெடுத்துள்ளனர்.
கிளிநொச்சி காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |