பாயினால் சுற்றிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்- ஸ்தலத்திற்கு விரைந்த தடயவியல் பொலிஸார்!
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட இரத்தினபுரம் பகுதியில் பராமரிப்பின்றிய கிணறு ஒன்றில் ஆண் ஒருவருடைய சடலம் ஒன்று காணப்படுகின்றமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இரத்தினபுரம் பகுதியில் பராமரிப்பு இன்றிக் காணப்படுகின்ற குறித்த காணிக்கு காணி உரிமையாளர்கள் சென்ற போது கிணற்றினுள் பாய் ஒன்றினால் சுற்றியவாறு சடலம் ஒன்று காணப்பட்டமை தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
கிணற்றினை அண்மித்த பகுதியில் சில தடயங்கள் காணப்படுவதாலும் சடலம் பாயினால் சுற்றி காணப்படுவதனால் தாற்கொலையா? கொலையா? என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இன்றைய தினம் தடயவியல் பொலிஸார், மாவட்ட நீதிபதி செ. லெனின்குமார் ஆகியோர் சடலத்தை பார்வையிட்ட பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சட்டவைத்திய அதிகரிக்கும் பொலிஸாருக்கும் உத்தரவிட்டுள்ளார்.







