வடகொரிய அதிபருடன் முதன் முறையாக தோன்றிய மகள் - அடுத்த ஆட்சியாளர் இவரா..!
வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் முதன் முறையாக தனது மகளுடன் நிற்கும் நிழற்படத்தை வெளியிட்டமை வடகொரியாவின் சர்வாதிகார பரம்பரை ஆட்சியின் புதிய தலைமுறை வாரிசை பகிரங்கப்படுத்தியுள்ளது.
பிஜொங் ஜொங்கில் கடந்த வெள்ளிக்கிழமை கண்டம் விட்டு கண்டம் பாயும் மிகப்பெரிய ஏவுகணை சோதனை செய்யப்படுவதற்கு முன்னர், அதற்கு அருகில் தந்தையும் மகளும் கைகோர்த்தபடி நிற்கும் படியாக இந்த நிழற்படம் எடுக்கப்பட்டதாக கூறப்படும் போதிலும் இன்றுதான் அதனை வட கொரியாவின் மத்திய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மகளின் பெயர்
ஆனால் இந்தப் படத்தில் தோன்றும் கிம் ஜோங் உன்னின் மகளின் பெயர் குறிப்பிடப்படவில்லை. எனினும் இது அவரது மகளான ஜுஏ ஆக இருக்கலாம் என கருதப்படுகிறது.
உலகின் மிக இரகசியமான நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் வடகொரிய அதிபரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விபரங்கள் வெளியுலகுக்கு அரிதாகவே தெரியும் நிலையில் இந்தப்படம் வெளியாகியுள்ளது.
கிம் ஜோங் உன்னிக்கு மூன்று குழந்தைகள் உள்ளதாகக் கூறப்படும் போதிலும், முதன் முறையாக தனது மகளுடனான படத்தை வெளியிட்டு தனக்குப் பின்னர் அவர்தான் வடகொரியாவின் ஆட்சியாளர் என்ற தோற்றப்பாட்டை அவர் வெளிப்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது.
Hwasong-17
கிம் ஜோங் உன் தனது மகளுடன் பார்வையிட்ட இந்த ஏவுகணையானது புதிய வகை கண்டம் விட்டு கண்டம் பாயும் Hwasong-17 ஏவகணை எனவும் இது அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதியை அடையும் திறன் கொண்டது எனவும் ஜப்பான் எச்சரித்தது.
எதிரிகள் தமது அச்சுறுத்தல்களைத் தொடர்ந்தால், தமது நாடும் அணு ஆயுதங்களைக் கொண்டு முழுமையான மோதலை நடத்த உறுதியுடன் செயற்படும் என்று கிம் ஜோங் உன் ஏற்கனவே எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
