மக்களை உறை குளிரில் நிற்க வைத்து பிறந்த தினம் கொண்டாடிய கிம் ஜோங் உன்?
மர்ம தேசம் என அறியப்படும் வடகொரியாவில் நூற்றுக்கணக்கான மக்களை உறைய வைக்கும் குளிரில் நிற்க வைத்து அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் தனது தந்தையின் பிறந்த தினத்தை கொண்டாடியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கிம் ஜோங் உன்னின் தந்தையின் பிறந்த தினத்தை முன்னிட்டு கடந்த செவ்வாய்கிழமை அன்று சமிஜியோன் நகரில் சிறப்புக் கூட்டம் நடந்தது.
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக 2019இற்கு பின் வடகொரியாவில் நடந்த முதல் தேசிய கூட்டமும் இதுவாக அமைந்திருந்தது.
கிம் ஜோங் உன்னின் தந்தை, நாட்டின் முன்னாள் தலைவர் என்பதால் இந்த நாளில் பொதுமக்கள் மரியாதை செலுத்த வர வேண்டும் என கட்டாய அறிவிப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வானவேடிக்கைகளுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மக்களை உறைய வைக்கும் குளிரில் நிற்க வைத்து, தந்தையின் புகழ் பற்றி பேசிய அதிபர் கிம் ஜோங் உன், அவருக்கும் அவருடன் மேடையில் இருந்த அவரது நண்பர்களுக்கு மட்டும் ரகசிய வெப்பமூட்டும் கருவிகள் அமைத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேடையில் இருந்தவர்களுக்கு மட்டும் ரகசியமாக வெப்பமூட்டும் கருவிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் அந்த கருவிகளுக்கு மேடையில் விரிக்கப்பட்டிருந்த கம்பளத்திற்கு கீழாக மின்இணைப்பு கொடுக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதில் பங்கேற்றவர்கள் எந்த வித கையுறையும் வெப்பமூட்டும் கருவிகளும் இல்லாமல் குளிரில் நின்று கொண்டிருந்ததை அந்நாட்டு ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள் மூலம் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.