செம்மணி குறித்து கிருசாந்தி கொலை வழக்கின் குற்றவாளி சோமரத்ன வெளிப்படுத்திய தகவல்
மாணவி கிருசாந்தி குமாரசாமி படுகொலை வழக்கின் மரணதண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்சவிடமிருந்து பெறப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைய, யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியை அண்மித்த பகுதிகளில் அகழ்வுகள் முன்னெடுக்கப்படும் என காணாமல் போனோர் அலுவலகம் அறிவித்துள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள சோமரத்ன ராஜபக்சவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்து, காணாமல் போனோர் தொடர்பில் ஆராயும் அலுவலகத்தின் அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை (09) நேரில் சென்று விசாரணைகளை நடத்தியிருந்தனர்.
இந்த விசாரணைகள் தொடர்பில் ஊடகமொன்று வினவிய போது, காணாமல் போனோர் தொடர்பில் ஆராயும் அலுவலகத்தின் தலைவர் மகேஸ் கட்டுலந்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சோமரத்ன ராஜபக்சவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பில் மதிப்பாய்வு செய்யப்பட்டு அதனை, மனித புதைகுழி அகழ்வில் ஈடுபடும் நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, நீதிமன்ற உத்தரவு பெறப்படும்.

அதன் பின்னர், நவீன ரக ரேடார் ஸ்கேனர்களை பயன்படுத்தி, செம்மணி மனிதப் புதைகுழியை அண்மித்த பகுதிகளில் அகழ்வுகள் மேற்கொள்ளப்படும். சோமரத்ன ராஜபக்ச சத்தியக் கடதாசி ஊடாக தெரிவித்துள்ள பல விடயங்கள் குறித்தும் அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதற்கமைய, குறித்த சத்தியக் கடதாசியின் உண்மை தன்மை, அதிலிருந்து பெற்றுக் கொள்ளக்கூடிய மேலதிக விடயங்கள் தொடர்பிலும் சோமரத்ன ராஜபக்சவிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.
காணாமல் போனோர் தொடர்பில் ஆராயும் அலுவலகம்
எவ்வாறாயினும், தன்னை விடுதலை செய்வதற்கான பரிந்துரைகளை முன்வைக்குமாறு சோமரத்ன ராஜபக்ச முன்வைத்த கோரிக்கை தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதற்கான அதிகாரம் எமது அலுவலகத்திற்கு கிடையாது.

அதன்படி, மாணவி கிருஷாந்தி குமாரசுவாமியின் படுகொலை வழக்கில், நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளியின் கோரிக்கைகளை, மீள் பரிசீலிப்பதற்கான பரிந்துரையை ஒருபோதும் எமது அலுவலகம் முன்னெடுக்காது.
இந்த நிலையில், சோமரத்ன ராஜபக்சவிடம் எமது அலுவலகம் மேற்கொள்ளும் விசாரணைகள் தொடர்பில் அவரின் மனைவியால் பகிரப்படும் தகவல்களை நாம் முற்றிலும் மறுதலிக்கின்றோம்.
அதற்கமைய, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்காக மாத்திரமே எமது அலுவலகம் செயற்படும், அதற்கான சாட்சி விசாரணைக்காகவே சோமரத்ன ராஜபக்சவை சந்தித்து, விடயங்களை அறிக்கை செய்து கொண்டுள்ளோம்.” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |