வனவிலங்கு பாகங்கள் விற்பனை: சிக்கிய நகைக்கடை உரிமையாளர் - மில்லியன் ரூபா அபராதம்
கித்துல்கல பகுதியிலுள்ள நகைக்கடை உரிமையாளர் ஒருவருக்கு 2.1 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ருவன்வெல்ல நீதவான் நீதிமன்றம் இன்று (08-07-2026) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் பாகங்களைச் சட்டவிரோதமாக வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பான 38 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக விற்பனை
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், விலங்குகளின் பாகங்களைச் சட்டவிரோதமாக விற்பனை செய்தமை மற்றும் வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, வனவிலங்கு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளினால் குறித்த நகைக்கடையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமேல் மாகாண வனவிலங்கு உதவிப் பணிப்பாளர் அலுவலகம் மற்றும் புலத்கோஹுபிட்டிய வனவிலங்கு வலய அலுவலக உத்தியோகத்தர்களால் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
முதலாவது தவணை
இதையடுத்து குற்றச்சாட்டுகள் தொடர்பில் கடந்த ஜூன் 24ஆம் திகதி ருவன்வெல்ல நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன்பின்பு வழக்கு இன்று விசாரணைகளுக்கு எடுத்துகொள்ளப்பட்ட நிலையில் குறித்த தொகையை மூன்று மாதங்களுக்குள் மூன்று சமமான தவணைகளில் செலுத்துமாறு சந்தேகநபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி, முதலாவது தவணைப் பணம் எதிர்வரும் ஒகஸ்ட் ஐந்தாம் திகதி செலுத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |