விகாரமஹாதேவி பூங்காவில் கத்தியுடன் நுழைந்த நபர்: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
விகாரமஹாதேவி பூங்காவிற்கு கூரிய கத்திகளுடன் வருகை தந்த நபரொருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறை ஊடகப் பிரிவு இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவிற்கு அருகில் அமைந்துள்ள போராட்ட களத்தில் தடைசெய்யப்பட்ட இரண்டு கத்திகளுடன் புதன்கிழமை (21-10-2026) இரவு நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
மேலதிக விசாரணை
காவல்துறை ஊடகப் பிரிவின் தகவலின்படி, கறுவாத்தோட்டக் காவல் எல்லைக்கு உட்பட்ட போராட்ட களத்தில் கொழும்பு தெற்குப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராகம - கந்தலியத்தபாலுவ பகுதியைச் சேர்ந்த இந்தச் சந்தேகநபர், பிக்குகள் முன்னெடுத்து வரும் இந்தப் போராட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பங்கேற்று வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், போராட்டம் நடைபெறும் இடத்தில் ஏதேனும் குற்றச் செயலைச் செய்வதற்கு இவர் திட்டமிட்டிருந்தாரா என்பது குறித்துக் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று (22-10-2026) கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, 100,000 ரூபாய் சொந்தப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |