கொலை செய்தவர்களிடம் நீதி கிடைக்குமா..! கிளர்ந்தெழப்போகும் தமிழர் தாயகம்
சிறிலங்கா அரசாங்கத்தின் நீதிக் கட்டமைப்பானது உண்மையில் நீதியுடன் செயற்பட்டிருந்தால் தமிழர்கள் ஆயுதமேந்தி போராட வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காது என்று ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் மெய்ப்பொருள் நிகழ்ச்சியில் கருத்து வெளியிடுகையில், மேற்கண்டவாறு தெரிவித்த அவர், காலப்போக்கில் நீதி வழங்கும் நடவடிக்கை அசமந்தப்படுத்தப்பட்டால், வடக்கு கிழக்கு மண் கிளர்ந்தெழும் என அவர் கூறினார்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டம்
மேலும் கருத்து தெரிவித்த அவர், எங்களுடைய தேசம் ஒருபோதும் நீதியைக் காணாது உறங்காது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சுமார் 2000 நாட்கள் கடந்த நிலையில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தங்களை உருக்கி - தங்களை இழந்து செய்கின்ற அந்தப் போராட்டமானது இந்த மண்ணில் நீடிக்கத் தான் போகிறது.
என்று சிறிலங்கா அரசாங்கம் நீதியை முன் வைக்கிறதோ? இனப்படுகலையின் உண்மை மௌனத்தை எப்போது கலைக்கிறதோ அதுவரை எமது தேசம் அதற்காக குரல் கொடுக்கும்.
இன்னும் பல மனிதப் புதைகுழிகள்
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி போன்று எதிர்காலத்தில் இன்னும் பல மனிதப் புதைகுழிகள் தேசத்தில் கண்டுபிடிக்கப்படலாம். அவை எல்லாவற்றிற்கும் பன்னாட்டு விசாரணையே தீர்வாக இருக்கும். அதற்கான அநீதியும் சர்வதேச ரீதியாக இருக்கும். இதனை இலங்கையில் ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது” என்றார்.
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரம், அதன் பின்னணி, தமிழர் தரப்பின் எதிர்வினை போன்ற பல கேள்விகளுக்கு எழுத்தாளர் தீபச்செல்வனின் பதில் இவ்வாறாக அமைந்தது.