நாமலின் கைது... கோட்டா - மகிந்த கால குற்றச்சாட்டுகள் மீண்டும் முன்னிலையில்
12ஆம் திகதிக்கு முன்னர் தாம் கைது செய்யப்படலாம் எனக் கூறி, நாமல் ராஜபக்ச பிரச்சாரம் ஒன்றைத் தொடங்கியுள்ள நிலையில் அவர் மீதான விமர்சனங்கள் தற்போது வலுத்துள்ளன.
ஊழல் குற்றச்சாட்டுகள் உட்பட அவர் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன. அவுஸ்திரேலியாவின் ஒரு ஊடக வலையமைப்பு 2022 மே மாத தொடக்கத்தில் நாமல் குறித்த பல விடயங்களை வெளிப்படுத்தியிருந்தது.
அந்த வெளிப்பாடுகளின் போது, கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகவும், மகிந்த ராஜபக்ச பிரதமராகவும் இருந்தனர். இதற்கிடையில், 2016-ஆம் ஆண்டில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2016/195 என்ற வழக்கு எண்ணின் கீழ், நிமல் பெரேராவிடமிருந்து 60 மில்லியன் ரூபாய் பெற்றதாக நாமல் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டிருந்தார்.
பல மில்லியன் டொலர்
குறித்த அவுஸ்திரேலிய ஊடக வலையமைப்பால் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் மற்றும் நிகழ்ச்சியால் ஒளிபரப்பப்பட்ட காணொளி ஆகியவற்றின் அடிப்படையில், மே 4, 2022 அன்று வெளியிடப்பட்ட முழு அறிக்கை பின்வரும் விடயங்களை கூறுகிறது.
ஹம்பாந்தோட்டை மருத்துவமனை கட்டுமானத்தின் போது, முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சவுற்கும் ஒரு அவுஸ்திரேலிய மருத்துவ நிறுவனத்திற்கும் இடையே ஊழல் பேரங்கள் நடைபெற்றதாக அவுஸ்திரேலியாவின் ஏ.பி.சி ஊடக வலையமைப்பு அப்போது அம்பலப்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் அப்போதைய ட்விட்டர் பதிவு ஒன்றின் மூலம் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்தார். தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் தெரியாத, இரண்டு நிறுவனங்களுக்கு இடையேயான ஒரு பரிவர்த்தனையில் தானும் தன் குடும்பத்தினரும் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்படுவதாக அவர் கூறியிருந்தார்.
எனக்கும் என் குடும்பத்தினருக்கும் தெரியாத இரண்டு நிறுவனங்களுக்கு இடையேயான ஒரு ஒப்பந்தத்தில், நானும் என் குடும்பத்தினரும் ஈடுபட்டிருந்ததாகக் குற்றம் சாட்டி, ஒரு ஆவணப்படம் மீண்டும் வெளிவந்துள்ளது.
நல்லாட்சி அரசு என் மீது பல குற்றச்சாட்டுகளைச் சுமத்தியது, அதற்காக நான் இன்னும் நீதிமன்றம் சென்று கொண்டிருக்கிறேன்.
ஆனால், அந்தக் குற்றச்சாட்டுகளில் எதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பல மில்லியன் டொலர் மதிப்பிலான ஹம்பாந்தோட்டை மருத்துவமனை கட்டுமானத் திட்டம் தொடர்பான பணமோசடி குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய நிறுவனமான ஆஸ்பென் மெடிக்கல் விசாரிக்கப்பட்டு வருவதாக, ஏ.பி.சி தொலைக்காட்சியின் 'ஃபோர் கார்னர்ஸ்' நிகழ்ச்சி மே 1 அன்று வெளிப்படுத்தியது.
ஏற்றுமதி நிதி மற்றும் காப்பீட்டு
'ஃபோர் கார்னர்ஸ்' நிகழ்ச்சி என்பது அவுஸ்திரேலியாவில் நடக்கும் ஊழல், மோசடி, நடப்பு நிகழ்வுகள் போன்றவற்றை விசாரிக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியாகும்.
2012-ஆம் ஆண்டில் ஹம்பாந்தோட்டை மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான பொருட்கள், சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பை வழங்கும் திட்டப்பணி, ஆஸ்பென் மெடிக்கல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் முறையான ஆதரவுடன், அப்போதைய ஏற்றுமதி நிதி மற்றும் காப்பீட்டுக் கழகத்திடமிருந்து இந்தத் திட்டத்திற்காக ஆஸ்பென் நிறுவனம் 18.8 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான காப்பீட்டுக் கொள்கையைப் பெற்றிருந்தது என்று அந்த அறிக்கை வெளிப்படுத்தியது.
அப்போதைய ஏற்றுமதி நிதி மற்றும் காப்பீட்டுக் கழகம் (தற்போது அவுஸ்திரேலிய ஏற்றுமதி நிதி நிறுவனம்), ஹம்பாந்தோட்டை மருத்துவமனை கட்டுமானத்தின் போது பொருட்கள், சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பை வழங்குவதற்காக ஆஸ்பென் மெடிக்கல் நிறுவனத்திற்கு ஒரு காப்பீட்டுப் பத்திரத்தை வழங்கியுள்ளதாக நாடாளுமன்றத்திற்கு ஒரு கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.
ஹம்பாந்தோட்டை மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளுக்கு ஆஸ்பென் மெடிக்கல் நிறுவனம் எப்போதாவது பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கியுள்ளதா என ஃபோர் கார்னர்ஸ் பத்திரிகையாளர்கள் கேட்டுள்ளனர், ஆனால் ஆஸ்பென் மெடிக்கல் பதிலளிக்க மறுத்துவிட்டது.
இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஆஸ்பென் மெடிக்கல் நிறுவனம், இதற்கான துணை ஒப்பந்தம் EN ப்ராஜெக்ட்ஸ் என்ற டச்சு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், தங்களது நிறுவனத்திற்கு 20க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இருப்பினும், ஆஸ்பென் நிறுவனம் இலங்கையில் தனது முதல் ரொக்கப் பரிவர்த்தனையை, பிரித்தானிய விர்ஜின் தீவுகளில் பதிவுசெய்யப்பட்ட சேபர் விஷன் ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனத்திற்கு 2.1 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தி மேற்கொண்டுள்ளது.
காவல்துறை விசாரணை
இந்தப் பரிவர்த்தனை இலங்கை காவல்துறை - நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் கவனத்திற்கு வந்தது. ஆஸ்பென் செலுத்திய 4.3 மில்லியன் யூரோக்கள் மொத்தத் தொகையின் ஒரு பகுதி இது எனத் தெரியவந்துள்ளது.
இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ராஜபக்ச குடும்பத்துடன் தொடர்புகளைக் கொண்ட நிமல் பெரேரா என்று ஃபோர் கார்னர்ஸ் வெளிப்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்காக நிதி திரட்டியதை நிமல் பெரேரா 2016-ல் ஒப்புக்கொண்டிருந்தார்.
தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்குப் பணம் எப்படி வந்தது என்று காவல்துறையினர் விசாரித்தபோது, அது ஒரு இத்தாலிய தொழிலதிபரிடமிருந்து வந்ததாக அவர் கூறினார், ஆனால் அந்தத் தொழிலதிபரின் அடையாளத்தை அவரால் நிரூபிக்க முடியவில்லை.
சேபர் ஹோல்டிங்ஸின் உரிமை குறித்து நிமல் பெரேராவிடம் காவல்துறை விசாரித்தபோது, தனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது என்றும், அது ஒரு இத்தாலிய நண்பருக்குச் சொந்தமாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், நிறுவன ஆவணங்களை ஆய்வு செய்தபோது, அந்நிறுவனத்தின் உரிமையாளர் நிமல் பெரேரா என்பது தெரியவந்தது.
ஆனாலும், தொழிலதிபராகிய நிமல் பெரேரா, தான் அந்த நிறுவனத்தின் ஊழியராக இருந்ததால் தனக்கு அந்த உரிமைகள் உண்டு என்று சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிக்குத் தெரிவிக்கிறார்.
அப்போது அனுர குமார திசாநாயக்க மற்றும் பிறர், ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பின் மூலம் கூட்டாக வெளியிட்ட தகவலின்படி, வழக்கு எண் 2016-195-இன் படி, நிமல் பெரேரா தனக்கு 60 மில்லியன் ரூபாய் வழங்கியதை நாமல் ராஜபக்ச ஒப்புக்கொண்டிருந்தார்.
ரக்பி போட்டித் தொடருக்காக 60 மில்லியன் கொடுத்ததாக நாமல் ராஜபக்ச கூறினார், ஆனால் அவர் அப்படி ஒரு பணத்தைப் பெறவில்லை என்று ரக்பி கூட்டமைப்பின் அனைத்து அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகளின்போது, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா மருத்துவமனைத் திட்டங்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய தகவல்களும் வெளியாகின.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |