சற்று முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் குகதாசன்
இரா சம்பந்தன் மறைவை அடுத்து திருகோணமலை மாவட்டத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட கதிரவேலு சண்முகம் குகதாசன் சற்றுமுன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.
கடந்த 02 ஆம் திகதி திருகோணமலை (Trincomalee) மாவட்டத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினராக கதிரவேலு சண்முகம் குகதாசன் நியமிக்கப்பட்டிருந்தார்.
நாடாளுமன்ற அமர்வு
நாடாளுமன்ற அமர்வு இன்று (09) காலை ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena) முன்னிலையில் அவர் பதவியேற்றார்.
திருகோணமலை, திரியாயைப் பிறப்பிடமாகக் கொண்ட குகதாசன், நீண்ட காலம் கனடாவில் வசித்து வந்தார். 2020 முதல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளைத் தலைவராகப் பணியாற்றுகிறார்.
இலங்கை தமிழரசுக் கட்சி
2020 நாடாளுமன்றத் தேர்தலில் குகதாசன் இலங்கை தமிழரசுக் கட்சியின் (Ilankai Tamil Arasu Kachchi) சார்பில் போட்டியிட்டு 16,770 வாக்குகளைப் பெற்றார்.
இத்தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு உறுப்பினரையே தமிழரசுக் கட்சி பெற்றது. இரா. சம்பந்தனுக்கு அடுத்து அதிக வாக்குகளை பெற்ற அடிப்படையில் இவர் சம்பந்தனின் மறைவை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |