குருக்கள்மடம் மனிதப் புதைகுழி விவகாரம்: மண் படிமப் பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவு
1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை நிறைவு செய்து கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணித்த முஸ்லிம்கள் ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடம் பகுதியில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு, நேற்று (08.09.2026) களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மனிதப் புதைகுழி அமைந்துள்ளதாக நம்பப்படும் பகுதியில் மண் படிம மாதிரி பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் நோக்கில் வழக்கு நீதிமன்றில் அழைக்கப்பட்டது.
கடந்த 24.08.2026 அன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் பிரதிநிதிகள், கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி, தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மட்டக்களப்பு குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை பொறுப்பதிகாரி ஆகியோர், குறித்த பகுதியில் மண் படிம மாதிரி பரிசோFW38AVதனைகளை மேற்கொள்வதற்கு தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தனர்.
பூர்வாங்க ஏற்பாடுகள்
இதனடிப்படையில், எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையான ஒரு வார காலப்பகுதியில், சந்தேகிக்கப்படும் மனிதப் புதைகுழி அமைந்துள்ளதாக நம்பப்படும் பகுதியில் மண் படிம மாதிரி பரிசோதனைகளை மேற்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதற்கிடையில், குறித்த பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நீதிமன்றத்தினால் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் நீதிமன்றில் முன்னிலையாகி, சந்தேகிக்கப்படும் மனிதப் புதைகுழி அமைந்துள்ளதாக நம்பப்படும் பகுதியில் மண் படிம மாதிரி பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு பிரதேச சபையினால் வழங்கக்கூடிய அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குறித்த பகுதியில் மண் படிம மாதிரி பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான தேவையான கட்டளைகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
மேலும், வழக்கு எதிர்வரும் 14.09.2026 அன்று மேலதிக நடவடிக்கைகளுக்காக மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |