குருந்தூர் மலைக்கு நில அளவையிலாளர்கள் அனுப்பி வைப்பு - வாக்குறுதியை மீறி சிறிலங்கா அரசாங்கம்..!
சிறிலங்கா அரசாங்கம் வாக்குறுதியை மீறி, குருந்தூர் மலைக்கு நில அளவையிலாளர்களை அனுப்பியுள்ளமைக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டனம் வெளியிட்டுள்ளது.
நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமே இவ்வாறு கண்டனம் வெளியிட்டுள்ளார்.
உறுதிமொழியை மீறினால் எவ்வாறு அரசாங்கம் மீது நம்பிக்கை வைக்க முடியும் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் கேள்வி எழுப்பியிருந்தார்.
அரசாங்கம் வழங்கிய உறுதிமொழி
தொடர்ந்து கருத்துரைத்த அவர், " குருந்தூர் மலை தொடர்பில் அரசாங்கம் எமக்கு உறுதிமொழியொன்றை வழங்கியது. நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றன.
விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, இந்த சபைக்கு உறுதி மொழியொன்றை வழங்கினார். அதேபோன்று சிறீதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோருக்கும் அமைச்சர் உறுதி வழங்கியிருந்தார்.
அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக தொல்பொருள் திணைக்களத்தால் மேலதிக நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அமைச்சர் கூறியிருந்தார். அந்தக் கூட்டம் இதுவரை நடைபெறவில்லை.
பிரதமரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை
இதற்கு மத்தியில் இன்று காலை கொழும்பில் இருந்து நில அளவை திணைக்களத்தினால் குருந்தூர் மலைக்கு நில அளவையியலாளர்கள் அனுப்பட்டுள்ளனர்.
இந்த சபைக்கும் சிறீதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோருக்கும் அமைச்சர் வழங்கிய வாக்குறுதியை மீறி நில அளவை செய்வதற்காக குருந்தூர் மலைக்கு நில அளவையிலாளர்கள் அனுப்பட்டுள்ளனர்.
நம்பகத்தன்மையுடன் செயற்படுமாறு நாம் பிரதமரை கேட்டுக்கொள்கின்றோம். உங்களது முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு எதிர்கட்சியை நீங்கள் கோருகின்றீர்க்ள்.
வாக்குறுதி வழங்கிவிட்டு இவ்வாறு அதனை மோசமான முறையில் மீறினால், உங்கள் மீது எந்தவொரு நம்பிக்கையையும் வைக்க முடியாது.
அமைச்சர்களில் மூத்தவர் என்ற வகையில் இதனை கருத்தில் கொள்ளுமாறு பிரதமரிடம் நான் கேட்டுக்கொள்கின்றேன் " எனக் குறிப்பிட்டார்.
