ரவிகரன் எம்.பி உள்ளிட்டோர் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முல்லைத்தீவு (Mullaitivu) - குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் (T. Raviharan) உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டமை தொடர்பான வழக்கில் பிரதிவாதிகள் மூவரும் நீதிமன்றால் அழைப்பு விடுக்கும்வரை முன்னிலையாக தேவையில்லை என உத்தரவிடப்பட்டுள்ளது.
குருந்தூர் மலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்ட நிலையில் குறித்த வழக்கு நேற்று (16.01.2025) விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்டபோதே நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
அதேவேளை இந்தவழக்குடன் தொடர்புடைய முன்னிலையாகாத நபர்களை மன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு நீதிமன்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில் “குருந்தூர்மலையில் கடந்த 2022.06.12 அன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மக்களோடு கலந்துகொண்டமைக்காக தொல்லியல் தொல்லியல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் கரைதுறைப்பற்று பலநோக்குக் கூட்டுறவுச்சங்கங்களின் தலைவர் இ.மயூரன் உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் வழக்கிலக்கம் பி1053/22 என்னும் குறித்த வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில், நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
அந்தவகையில் தொல்லியல் திணைக்களத்தால் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் துரைராசா ரவிகரன், இ.மயூரன் உள்ளிட்ட மூவர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
இந் நிலையில் வழக்கினை ஆராய்ந்த நீதவான், மன்றில் முன்னிலையாகிய மூவரும் நீதிமன்றால் அழைப்பு விடுக்கும்வரை, நீதிமன்றில் முன்னிலையாக தேவையில்லை என உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலும் பல விடயங்களை ஐபிசி தமிழின் காலை நேர செய்தியில் காண்க.....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |