தமிழ் எம்.பிக்கள் இருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிப்பு(காணொளி)
முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையில் பௌத்த துறவிகளின் வழிபாட்டுக்கு தடை ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று(14) முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
இந்த வழக்கு விசாரணையின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் மற்றும் எஸ். வினோ நோகராதலிங்கம் ஆகியோர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த தவணை
இந்த வழக்கின் அடுத்த தவணையானது அடுத்த வருடம் ஜனவரி 11 ஆம் திகதிக்கு போடப்பட்டுள்ளதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையையும் மீறி பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டிருந்த நிலையில், பூசை வழிபாடுகளுக்காகச் சென்ற பௌத்த குருமாரின் வழிபாட்டுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அவமானப்படுத்திய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சில பிக்குகள் முல்லைத்தீவு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
அந்த முறைப்பாட்டுக்கமைவாக முல்லைத்தீவு காவல்துறையினா் முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்குதாக்கல் செய்திருந்தனர்.
இன்றைய வழக்கு விசாரணை
அந்த வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். வினோ நோகராதலிங்கம், செல்வராசா கஜேந்திரன் உட்பட ஐவரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு வழக்கு தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய வழக்கு விசாரணையின் போது அவர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.