குருந்தூர் மலையில் பதற்றம்! காணொளி இணைப்பு
தமிழ் மக்கள் அமைதியாக பொங்கல் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பகுதிக்குள் குருந்தூர்மலையில் ‘குருந்தி விகாரை’ பௌத்த பிக்கு நுழைந்து தமிழர்களின் பொங்கல் வழிபாட்டை சீர்குலைக்க முயன்றார்.
இதனால் அங்கு பதட்டநிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தொல்பொருள் திணைக்களத்தின் கடுமையான விதிகளின்படி, குருந்தூர் மலையில் இன்று (18) பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.
மூன்றாம் இணைப்பு
முல்லைத்தீவு - குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கல் நிகழ்வு சுமூகமாக இடம்பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தற்போது பொங்கல் நிகழ்வுகள் நிறைவடைந்த நிலையில், பூஜைக்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிகின்றன.
இரண்டாம் இணைப்பு
முல்லைத்தீவு - குருந்தூர்மலையில் ஐநூறுக்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் மற்றும் பௌத்த பிக்குகள் இணைந்து அங்கு சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கல் நிகழ்வு இடம்பெறவுள்ள சிங்கள மக்கள் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய பொங்கல் நிகழ்வுகளில் குழப்பங்கள் ஏற்படலாம் என்பதன் அடிப்படையில், 3 பேருந்துகள், 2 இராணுவ ரக் வாகனங்களில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர், விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு கடமைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தமிழ் மக்களும் பொங்கல் நிகழ்விற்காக வருகை தந்தவண்ணம் உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மிகவும் ஒரு அபாயகரமான சூழலிலே பொங்கல் நிகழ்வு எவ்வாறு இடம்பெறவுள்ளது என்ற நிலையில் தற்போது பௌத்த விகாரையிலே வழிபாடுகளில் பௌத்த மக்கள் மற்றும் பௌத்த துறவிகள் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.
புராதன சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அப்பிரதேச மக்கள் தங்களது மத ரீதியான பூஜை வழிபாடுகளை மேற்கொள்ளலாம் எனவும் ஒருவரது மத வழிபாடுகளுக்கு மற்றைய தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள் என்பதற்காக ஒருவரது மதவழிபாடுகளை தடுக்க தடை கட்டளை வழங்க முடியாது என காவல்துறையினரின் தடையுத்தரவு கோரிக்கையை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்று நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குருந்தூர்மலை பொங்கல் நிகழ்வை தடைசெய்ய நீதிமன்றம் மறுப்பு - நிபந்தனைகளை விதித்த தொல்பொருள் திணைக்களம் |
முதலாம் இணைப்பு
முல்லைத்தீவு - குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கல் நிகழ்வு இடம்பெறவுள்ள நிலையில், சிங்கள மக்களும் பாதுகாப்பு தரப்பும் அங்கு குவிந்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த பகுதிக்கு பெருமளவான சிங்கள மக்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நூற்றுக்கணக்கான காவல்துறையினர், விசேட அதிரடிப் படையினர் 3 பேருந்துகள் மற்றும் 2 இராணுவ ரக் வாகனங்களில் குருந்தூர் மலை நோக்கி பயணிப்பதாக அவர் தெரிவித்தார்.
இறுதியாக அங்கு பொங்கல் நிகழ்வு ஏற்பாடாகி இருந்த போது காவல்துறையினரின் நடவடிக்கையால், பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழர் மரபுகளைப் பேணிக்காக்க அணிதிரளுங்கள் - யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு |















