மத வெறுப்பை தூண்டும் லால்காந்த! ஆவேசத்தில் நாமல்
விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த மத வெறுப்பைப் பரப்புவதாகவும், பௌத்தம் மற்றும் மகா சங்கத்தினரை அவமதித்துள்ளதாகவும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
அமைச்சரின் சமீபத்திய கருத்துக்கள் 2007 ஆம் ஆண்டு 56 ஆம் எண் கொண்ட சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (ICCPR) சட்டத்தை மீறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ICCPR சட்டத்தின் விதிகள்
மிஹிந்தலை ராஜமஹா விஹாரையின் தலைமை பிக்குவை அமைச்சர் லால்காந்த சமீபத்தில் அவமதித்ததாகவும், வளவாங்குனவெவ தம்மரதன தேரரை அவமதிக்கும் வார்த்தைகளில் குறிப்பிட்டதாகவும் நாமல் கூறியுள்ளார்.

எனவே, இது ஒரு மூத்த பௌத்த பிக்கு மீதான தாக்குதலாக அவர் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
இந்த நிலையில், ICCPR சட்டத்தின் விதிகளை மேற்கோள் காட்டி, பாகுபாடு, விரோதம் அல்லது வன்முறையை ஊக்குவிக்கும் செயல்கள் உட்பட எந்தவொரு நபரும் தேசிய, இன அல்லது மத வெறுப்பைத் தூண்டுவதை சட்டம் தடைசெய்கிறது என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சட்ட நடவடிக்கை
இதன்படி, அமைச்சரின் அறிக்கைகள் மேற்படி வரையறைக்குள் வருவதாகத் தோன்றுவதாகவும், லால்காந்த மீது அரசாங்கம் என்ன சட்ட நடவடிக்கை எடுக்க விரும்புகிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேபோன்ற குற்றத்தை ஒரு சாதாரண குடிமகனோ அல்லது எதிர்க்கட்சி உறுப்பினரோ செய்திருந்தால், அதிகாரிகள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்திருப்பார்கள், ஆனால் இந்த விடயத்தில் அரசாங்கம் அமைதியாக இருக்கிறது என்றும் நாமல் தொடர்ந்தும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், அரசியல்வாதிகளுக்கும் மகா சங்கத்தினருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அசாதாரணமானது அல்ல என்றாலும், இலங்கை வரலாற்றில் எந்த அரசியல்வாதியும் மகா சங்கத்தினரை இவ்வளவு அவமதித்ததில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |