பிரித்தானிய சட்டத்தின் வலையில் புலம்பெயர்ந்தோர்! தீவிரமாகும் நெருக்கடி
பிரித்தானியாவில் சட்டவிரோதமாக வேலை செய்பவர்கள் மற்றும் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோருக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் வரலாறு காணாத அளவுக்கு தீவிரமாகியுள்ளன.
2024-ம் ஆண்டு புதிய ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, அரசினால் இதுவரை 50,000 பேர் வரை நாடுகடத்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி சட்டவிரோத வேலைவாய்ப்புகளை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் 77 சதவீதம் அதிகரித்துள்ளன.
சட்ட உதவி இல்லாமை
2024 ஜூலை முதல் 2025 டிசம்பர் வரை நடந்த நடவடிக்கைகளில் 14,400 சோதனைகளில் 12,300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் பல புலம்பெயர்ந்தோர் திடீரென வேலை இழப்பு, கைது மற்றும் நாடுகடத்தல் அபாயத்தை சந்தித்து வருகின்றனர்.
மேலும், வெளிநாட்டு குற்றவாளிகள் என்ற பெயரில் 5,430 பேர் கடந்த ஒரு ஆண்டில் நாடு கடத்தப்பட்டுள்ளனர், இது முந்தைய ஆண்டை விட 12 சதவீதம் அதிகம்.
இதனால் குடும்பங்களிலிருந்து பிரிவு, சட்ட உதவி இல்லாமை போன்ற மனிதாபிமான சிக்கல்கள் எழுந்துள்ளன.
அகதி (Asylum) தொடர்பாக, விண்ணப்ப முடிவுகளுக்காக காத்திருப்போர் எண்ணிக்கை 39 சதவீதம் குறைக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.
குறைக்கப்பட்ட விடுதிகள்
31,000 பேருக்கு ஆரம்ப முடிவுகள் வழங்கப்பட்டாலும், எத்தனை பேருக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது என்பது தெளிவாக இல்லை.

இந்தத் தெளிவின்மை, விண்ணப்பதாரர்களிடையே பெரும் அச்சத்தையும் மனஅழுத்தத்தையும் உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகதிகளுக்காக பயன்படுத்தப்பட்ட விடுதிகள் தற்போது 400-இலிருந்து 200-ஆக குறைக்கப்பட்டுள்ளன.
இதனால் அரசு செலவுகள் குறைந்தாலும், பலர் மாற்று வசதி இல்லாமல் நிச்சயமற்ற சூழலில் தள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், அரசு “Secure Borders UK” என்ற பெயரில் ஒரு TikTok கணக்கை தொடங்க உள்ளது.
இதில் கைது, நாடுகடத்தல் காட்சிகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவறான தகவல்களை எதிர்க்கும் முயற்சியாக சொல்லப்பட்டாலும், மனித உரிமை அமைப்புகள் இதை பயமுறுத்தும் பிரச்சாரமாக பார்க்கின்றன.
மொத்தத்தில், எல்லை பாதுகாப்பு மற்றும் செலவுக் கட்டுப்பாடு என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகள், புலம்பெயர்ந்தோரின் பாதுகாப்பு, மனித உரிமை, குடும்ப ஒற்றுமை மற்றும் மனநலத்துக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |