காணி விடயத்தில் மிகப்பெரிய அநியாயம் - ரணில் போட்ட கண்டிப்பான உத்தரவு
சுவீகரிக்கப்பட்ட காணிகளை அரசாங்கம் பயன்படுத்தாவிட்டால், அந்தக் காணிகளை மக்களிடம் மீள வழங்குவோம். காணி விடயத்தில் மிகப்பெரிய அநியாயத்தை செய்துள்ளோம் என அதிபர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
துறைசார் அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் வைத்து மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “காணிகளை கையகப்படுத்தவும் நட்டஈடு வழங்கவும் புதிய சட்டமொன்று கொண்டுவரப்பட வேண்டும். காணி கையகப்படுத்தப்பட்டு நட்டஈடு வழங்காத காணிகள் எவை என்பதை அடையாளம் காண வேண்டும்.
மக்களிடம் கையளியுங்கள்
அந்தப் பட்டியலை எடுத்து அதில் தேவையான காணிகளை வைத்திருங்கள். ஏனையவற்றை மக்களிடம் கையளியுங்கள்.
காணிகளை கையகப்படுத்தி அந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படாத காணிகள் இருக்கின்றனவா என்று பாருங்கள். அந்தப் பட்டியலை பார்த்து பயன்படுத்தப்படவில்லை என்றால் அவற்றையும் மக்களிடம் கையளியுங்கள்.
எதிர்காலத்தில் காணிகளை கையகப்படுத்தும் போது சந்தை பெறுமதியை மக்களுக்கு வழங்க வேண்டும். சந்தை பெறுமதிக்கு மக்களுக்கான காணிகளை வாங்கிக் கொடுங்கள். அதற்குத் தேவையான முழுமையான பணத்தை நான் தேடித் தருகின்றேன்.
எங்களுக்கு தேவையான காணிகளை மட்டும் வைத்துக்கொண்டு எஞ்சியவற்றை நாம் மக்களிடம் கொடுத்து விடுவோம். அரசாங்கம் இவற்றை வைத்திருப்பதில் எந்தப் பயனும் இல்லை.
எதிர்காலத்தில் காணிகளை கையகப்படுத்துவதற்கான அளவுகோல்களை தயார் செய்யுங்கள். அந்தந்த அமைச்சுகள் அதற்கான பணத்தைக் கொடுக்க வேண்டும். பணம் பெற முடியாது என்றால் அதனை செய்ய முடியாது.
சரியான அளவுகோல்
சரியான அளவுகோலைத் தர முடியுமாயின் அதனை அமைச்சரவை கொள்கையாக மாற்ற முடியும்.
மக்களின் காணிகளை எடுக்கிறோம். நட்டஈடு கொடுப்பதில்லை. அவற்றை வெறுமனே வைத்துக் கொண்டிருக்கிறோம். பயன்படுத்தக்கூடிய காணிகளையும் வைத்துக் கொண்டிருக்கிறோம். இருக்கும் காணிகளில் நாம் உச்ச பயனைப் பெற வேண்டும்.
நாட்டை துரிதமாக அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் விவசாயத்தை பயன்படுத்தி அபிவிருத்தி அடைய முடியும். 1972 ஆம் ஆண்டு தொடக்கம் 1974 ஆம் ஆண்டு வரை காணி மறுசீரமைப்பு மூலம் பாரிய அளவிலான காணிகள் கையகப்படுத்தப்பட்டன. அதன் பின்னர் மகாவலி திட்டத்தின் ஊடாக மேலும் பாரியளவிலான காணிகளை கையகப்படுத்த நேரிட்டது.
கம்முதாவ உள்ளிட்ட திட்டங்களுக்கு காணிகளை வழங்கும்போது மேலும் காணிகள் தேவைப்பட்டன. இவற்றில் கையகப்படுத்தப்பட்ட ஏராளமான காணிகள் சிக்கிப்போயுள்ளன.
அதிவேக நெடுஞ்சாலைக்காக காணிகள் கையகப்படுத்தப்பட்டன. தெற்கு அபிவிருத்திக்காக காணிகள் கையகப்படுத்தன. இப்படி இவை அனைத்தும் சிக்கிப்போயுள்ளன. இது குறித்து இந்தக் குழுவில் ஆராய வேண்டும்.
அரச காணி வங்கி
"If the government does not use the appropriated lands, we will return those lands to the people."
— PMD (@PMDNewsGov) May 15, 2023
"පවර ගත්ත ඉඩම්වලින් රජය වැඩක් ගන්නේ නැත්නම් අපි ඒ ඉඩම් ආපසු ජනතාවට දෙමු."
"சுவீகரிக்கப்பட்ட காணிகளை அரசாங்கம் பயன்படுத்தாவிட்டால், அந்தக் காணிகளை மக்களிடம் மீள வழங்குவோம்."#LKA pic.twitter.com/1685ySdo4o
அரச காணி வங்கி ஒன்றை ஏற்படுத்தி அதற்குள் அரச காணிகள், கட்டிடங்கள் குறித்து அனைத்து தகவல்களையும் அடுத்த இரண்டு வருடங்களில் உள்ளடக்க வேண்டும்.
இரண்டாவதாக இந்தத் திட்டத்தை மேலும் மேம்படுத்த அனைத்து பிரதேச செயலாளர்கள் பிரிவுகளிலும் அனைத்து கிராம சேவகர் பிரிவிலும் உள்ள காணிகளையும் அவை யாருக்கு சொந்தமானவை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சேகரிக்க வேண்டும். இந்தப் பணிகளை பூர்த்தி செய்ய எவ்வளவு காலம் செல்லும். சுமார் 4, 5 ஆண்டுகள் செல்லுமா?
அனைத்துக் காணிகளும் மாவட்ட செயலாளர் பிரிவின் கீழ் இருக்க வேண்டும்.
அதன் பின்னர் அவற்றுக்கு வரி விதிக்கும் முறை ஒன்றை கண்டறிய வேண்டும். அந்த வரி வருமானத்தை அந்தப் பிரதேசத்தின் அபிவிருத்திக்கு பயன்படுத்த முடியும். அந்தப் பணத்தை சம்பளம் வழங்க பயன்படுத்த முடியாது” - என்றார்.
