பொத்துவில் கனகர் கிராமத்தில் 73 குடும்பங்களுக்கு காணி அனுமதிப் பத்திரம் வழங்கி வைப்பு(படங்கள்)
மிக நீண்டகாலமாக மக்கள் போராட்டமாகவும், தமிழ்த் தேசிய அரசியற் பிரமுகர்களின் பாரிய பிரயத்தனத்தினமாகவும் இருந்த
பொத்துவில் கனகர் கிராமத்தில் மீள்குடியேற்றப்படுகின்ற குடும்பங்களுக்கு காணி அனுமதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று(11) திருகோணமலையில் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் தலைமையில் இடம்பெற்றது.
பல வருட பிரயத்தனம்
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர்களான தவராசா கலையரசன், முஷரப், கபில அத்துக்கோரல, ஐ.பி.சி தமிழ் ஊடகக் குழுமத் தலைவர் கந்தையா பாஸ்கரன், பொதுவில் பிரதேச செயலாளர் உள்ளிட்ட குழுவினர், கனகர் கிராமத்தில் முதற்கட்டமாக மீள்குடியேற்றப்பட்ட பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
பொத்துவில் கனகர் கிராமத்தில் பூர்வீகமாகக் குடியிருந்து யுத்த காலத்தில் வெளியேறிய மக்களை மீள்குடியேற்றும் முகமாக அப்பிரதேச மக்களால் பல வருடங்களாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது
இதனையடுத்து காணி வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் கந்தையா பாஸ்கரனிடம் முன்வைத்தமைக்கு அமைவாகவே இந்த திட்டம் சாத்தியமாகியுள்ளது.
அத்துடன் இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனால் பல வருட பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்ததையிட்டு அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் - நாடாளுமன்ற உறுப்பினர் திசாநாயக்கா, பொத்துவில் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் முஷரப் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர், பொத்துவில் பிரதேச செயலாளர் ஆகியோரின் ஒத்துழைப்பின் காரணமாக தற்போது அம்மக்களில் முதற்கட்டமாக பொத்துவில் பிரதேச செயலகத்தினூடாக தேர்வு செய்யப்பட்ட 73 குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
மேலும் காணி வழங்குவதற்கான பத்திரங்களை வழங்குதல், துப்புரவு பணிகள் போன்றவை கந்தையா பாஸ்கரனின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.