நாட்டில் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை
நாட்டில் ஐந்து மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த எச்சரிக்கையானது, நாளை (31) பிற்பகல். 2.30 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பதுளை மாவட்டத்தின் சொரணாதொட்ட மற்றும் பஸ்சர, கண்டி மாவட்டத்தில் உடுதும்பர பிரதேசம், மொனராகலை மாவட்டத்தில் மெதகம பிரதேசம், நுவரெலியா மாவட்டத்தில் ஹகுரன்கெத்த மற்றும் வலப்பனை பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை
இந்நிலையில், காலநிலை மாற்றங்களால் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பில் அப் பகுதியில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மேலும், பதுளை மாவட்டத்தின் ஹாலிஎல மற்றும் பண்டாரவளை பிரதேசங்களுக்கும் மாத்தளை மாவட்டத்தின் லக்கல பல்லேகம, ரத்தோட்டை, நாவுல ஆகிய பகுதிகளுக்கும் முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.