உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள காணிகள்! உரிமையாளர்களுக்கு அரசாங்கம் சார்பில் உறுதிமொழி
காணிகளுக்கான சட்ட ரீதியான ஆவணங்கள் உங்களிடம் இருந்தால் , அந்த காணிகளை பெற்று தருவோம். காணிகளை பலவந்தமாக வைத்துக்கொள்ளும் எண்ணம் தேசிய மக்கள் சக்தியினருக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
வலி.வடக்கு பிரதேசத்தில் கடந்த 36 வருடங்களுக்கு மேலாக இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை மீள தம்மிடமே ஒப்படைக்குமாறு அப்பகுதி மக்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்திற்கு செல்லும் பாதைக்கு அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் போராட்டம் நடைபெற்ற இடத்தில் சென்று சந்தித்ததுடன் , பின்னர் அவர்களின் பிரதிநிதிகள் சிலரை தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு அழைத்து, காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடினார்.
இளங்குமரன் கருத்து
இதன் போது, காணி உரிமையாளர்களிடம் நாடளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் கருத்து தெரிவிக்கும் போது,

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், மக்களுக்குரிய காணிகள் கட்டங்கட்டமாக விடுவிக்கப்பட்டு வருகின்றது.
இது விடயத்தில் நாம் வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டு வருகின்றோம். மக்களுக்கு ஒப்படைக்கப்படும் காணிகளை உரிய வகையில், உரிய ஆவணங்களுடன் கையளிக்க வேண்டும்.
அப்போதுதான் இப்பிரச்சினை நிரந்தரமாக தீரும். உங்கள் வசம் ஆவணங்கள் இருந்தால் நிச்சயம் உங்களுக்குரிய மண் உங்களுக்கே சொந்தமாகும்.
எமது ஆட்சி மக்களுக்கானது, எனவே, மக்களின் சொத்துகளை பலவந்தமாக வைத்துக்கொள்வதற்குரிய எண்ணம் எதுவும் இல்லை.
தேசிய பாதுகாப்புக்கு அத்தியாவசியம் அற்றது எனக் கருதப்படும் இடங்களை விடுவிக்குமாறு எமது அரசாங்கம் உரிய தரப்புகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. எனவே, நிச்சயம் காணிப்பிரச்சினைக்கு தீர்வு கிட்டும்” என தெரிவித்துள்ளார்.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்