22 பில்லியன் நஷ்டத்தில் லங்கா சதொச...! சபையில் அம்பலம்
இலங்கையின் அரச வர்த்தக நிறுவனமான லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனத்தின் ஒட்டுமொத்தத் திரண்ட நஷ்டம் 2025 டிசம்பர் மாத நிலவரப்படி ரூபா 22 பில்லியனாக உயர்ந்துள்ளதுடன் தற்போதிருக்கும் 423 விற்பனை நிலையங்களில் 212 கிளைகள் தொடர்ந்தும் நஷ்டத்திலேயே இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க இதனை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த நிதி நெருக்கடி தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளார்.
சரக்கு இருப்புகள்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “2025 டிசம்பரில் விநியோகஸ்தர்களுக்கு வழங்க வேண்டிய கடன் தொகை ரூபா 14 பில்லியனாக இருந்தபோதிலும் நிறுவனத்திடம் இருந்த சரக்கு இருப்புகளின் பெறுமதி (Stock value) ரூபா 5.8 பில்லியனாக மட்டுமே இருந்தது.
முன்னர் இயங்கிய 452 விற்பனை நிலையங்களில் 250 கிளைகள் நஷ்டத்தில் இயங்கியதால் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் கீழ் சில கிளைகள் மூடப்பட்டன.

தற்போது இயங்கும் 423 கிளைகளில் 212 கிளைகள் நஷ்டமடைவதற்குக் நகர்ப்புறங்களுக்கு அப்பால் திட்டமிடப்படாமல் அவை அமைக்கப்பட்டதே பிரதான காரணம்.
சதொச கிளைகளை ஈர்க்கக்கூடிய வகையில் மாற்றியமைக்க 100 விற்பனை நிலையங்களை நவீனமயமாக்கத் டெண்டர் நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன.
தனியார் கடைகள்
2026 ஆம் ஆண்டில் மேலும் 25 புதிய கிளைகளைத் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் 7 கிளைகளுக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதுடன் 11 கிளைகளுக்கான ஒப்பந்தங்கள் தயாராக உள்ளன.

2020 இல் ரூபாய் 1.387 பில்லியன், 2021 இல் ரூபாய் 840 மில்லியன், 2022 இல் ரூபாய் 35 மில்லியன், 2023 இல் ரூபாய் 695 மில்லியன், 2024 இல் ரூபாய் 776 மில்லியன் மற்றும் 2025 இல் ரூபாய் 721 மில்லியன் என சதொச நிறுவனம் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.
தனியார் கடைகளுக்குப் பொருட்களை விநியோகித்த பின்னர் எஞ்சிய அரைகுறைப் பொருட்களை மட்டுமே சதொசவிற்கு வழங்கும் ஒழுங்கீனத்தில் ஈடுபட்ட எட்டிற்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் கடந்த 3 மாதங்களில் கருப்புப் பட்டியலில் (Blacklisted) சேர்க்கப்பட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |