லசந்த படுகொலை விசாரணை : அரசிடம் அறிக்கை கோரும் நாமல்
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பில் விசாரணைகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படாதவாறு விசாரணை சுருக்கமொன்றை நீதி அமைச்சர் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் (Polonnaruwa) நேற்று (09.02.2025) இடம்பெற்ற கிராமத்துக்கு கிராமம் வேலைத்திட்டத்தை ஆரம்பித்த போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கிய மக்களுக்கு இந்த அரசாங்கம் அநீதியிழைத்துள்ளது.
அரசாங்கத்தின் ஆட்சி
தாம் கூறிய அனைத்தும் பொய் என்பதை அரசாங்கமே ஒத்துக் கொண்டதைப் போன்று செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. பழைமை முறையிலேயே இந்த அரசாங்கத்தின் ஆட்சியும் தொடர்கின்றது.
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பில் நீதி அமைச்சர் நாடாளுமன்றத்திற்கு தெளிவுபடுத்த வேண்டும்.
இந்த வழக்கு தொடர்பில் எத்தனை சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்? விசாரணைகள் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன? என்பது குறித்த சுருக்கமொன்றை விசாரணைகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படாதவாறு முன்வைக்க வேண்டும்.
லசந்த விக்கிரமதுங்க படுகொலை
அதேவேளை அரசாங்கமானது நீதித்துறை, சட்டமா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் என்பவற்றை சவாலுக்கு உட்படுத்தும் செயற்பாடுகளையும் நிறுத்த வேண்டும்.
நீதி அமைச்சர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றிய சிரேஷ்ட அதிகாரியும் சட்டத்தரணியுமாவார். அவர் அரசியல் பயணத்தை நிறைவு செய்யும் போது மீண்டும் தொழில் நிமித்தம் நீதிமன்றம் செல்ல வேண்டியேற்படும்.
எனவே முன்னர் தான் பணியாற்றிய சட்டமா அதிபர் திணைக்களத்தை சவாலுக்குட்படுத்துவதை நீதி அமைச்சர் தவிர்த்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கின்றோம்.
கொள்கைகளில் அரசாங்கம்
கிரிஷ் நிறுவனத்துக்கும் எனக்கும் றகர் போட்டிக்காக அனுசரணை பெற்றுக் கொண்டமை தொடர்பிலேயே தொடர்பிருக்கிறது. அது சட்ட ரீதியான கொடுக்கல் வாங்கலாகும். எவ்வாறிருப்பினும் அதனை அரசியல் பழிவாங்கலுக்காக இந்த அரசாங்கம் பயன்படுத்துகிறது.
தற்போது ஏற்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருள் தட்டுப்பாட்டுக்கு கடந்த அரசாங்கத்தின் மீது பழி சுமத்தப்பட்டுள்ளது. அவ்வாறெனில் பரிசோதனையின்றி 300க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமைக்கும் கடந்த அரசாங்கத்தின் மீது பழிசுமத்தப்படுமா? தமது கொள்கைகளில் அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டுடனேயே இன்றும் செயற்பட்டு வருகிறது.
அநுரபிரிதர்ஷன யாபா மற்றும் யோஷித கைது செய்யப்பட்ட போது சட்டமா அதிபர் திணைக்களம் சிறப்பாக செயற்பட்டதாகக் கூறிய அரசாங்கம், அவர்களுக்கு பிணை வழங்கப்பட்ட போது அதற்கு முரணாக விமர்சிக்கின்றது என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)