லசந்த, எக்னெலிகொட, தாஜுதீன் கொலை வழக்கு - சிக்குமா ராஜபக்ச குடும்பம்
லசந்த விக்கிரமதுங்க (Lasantha Wickrematunge), பிரதீப் எக்னலிகொட மற்றும் தாஜுதீன் ஆகியோரின் கொலைகள் மற்றும் கடத்தல்கள் உள்ளிட்ட அனைத்து குற்றச் செயல்கள் தொடர்பிலும் துரிதமாக விசாரணைகளை முன்னெடுத்து சட்டத்தை செயற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
இவற்றை தவிர்த்து பிரதான 7 குற்ற சம்பவங்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த அரசாங்கம் பரிந்துரைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கொலை தொடர்பான விசாரணை
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எமது அரசாங்கம் எந்தவொரு குற்றச் செயல்கள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுக்காது இருக்கப் போவதில்லை. அதனால் தான் சமீபத்திய சம்பவங்களான தாஜுதீன் கொலை, லசந்த விக்கிரமதுங்க கொலை, மற்றும் பிரகீத் எக்னெலிகொட கொலை என அனைத்தையும் நாங்கள் நிச்சயமாக விசாரிப்போம்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற தாஜுதீன் கொலை, லசந்த விக்கிரமதுங்க கொலை, பிரகீத் எக்னெலிகொட கொலை உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.
பிரகீத் எக்னெலிகொட கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடிக்கப்பட்டு வழக்கு நடந்து வருகிறது. மீண்டும் ஒரு விசாரணை தேவையில்லை.
7 முக்கிய குற்றவியல் வழக்குகள்
இந்நிலையில் கூடிய விரைவில் நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடிய 7 விடயங்கள் இருப்பதாலேயே அவை தொடர்பிலேயே நாங்கள் கூறியுள்ளோம்.
ஆனால் அதுமட்டுமன்றி. கடந்த காலங்களில் இடம்பெற்ற அனைத்து வகையான குற்றச் செயல்கள், கொலைகள், கடத்தல்கள் உள்ளிட்டவை தொடர்பிலும் விசாரணைகளை நடத்தி சட்டத்தை செயற்படுத்துவோம்.
7 முக்கிய குற்றவியல் வழக்குகள் துரித விசாரணைக்காக பரிந்துரைக்கப்பட்டு அவசரமாக முடிக்கப்பட வேண்டியுள்ளது. மற்றபடி 7 தான் என்று தவறாக எண்ண வேண்டாம்.
கடந்த காலங்களில் நடந்த அனைத்துப் பொருளாதாரக் குற்றங்கள், கொலைகள், ஊடகவியலாளர்கள் கடத்தல் போன்ற அனைத்துச் செயல்களுக்கும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
வரி ஏய்ப்பு மோசடி
இதேவேளை, இலங்கையின் நீதித்துறை தமது எல்லைக்குள் அரசியல் செல்வாக்கு இல்லாமல் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
அர்ஜுன அலோசியஸுக்கு வரி ஏய்ப்பு மோசடியில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இவ்வாறான நிதிக் குற்றவாளிகள் பெரும் அச்சத்தில் உள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்று குறுகிய காலப்பகுதியிலேயே அரச பொறிமுறையில் பலம் வாய்ந்த நிறுவனங்கள் தமது துறைகளில் சுயாதீனமாக செயற்படுவது சாதகமான அணுகுமுறையை எடுத்துக்காட்டுவதாகவும் அந்த ஆய்வாளர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |