கோட்டாபயவின் யோசனையால் உருவாகிறது புதிய சட்ட மூலங்கள்!
இணையத்தள பாதுகாப்பு தொடர்பில் இரண்டு சட்டமூலங்களைத் தயாரிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொழிநுட்ப அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனையை கருத்தில் கொண்டு குறித்த இரண்டு சட்டமூலங்களைத் தயாரிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு, தொழிநுட்ப அமைச்சு மற்றும் தொடர்புடைய ஏனைய தரப்பினர்களுடன் கலந்துரையாடிய பின்னர், பாதுகாப்புத் துறையின் இணையத்தள பாதுகாப்பின் ஏற்பாடுகள் உள்ளடங்கலாக வேறானதொரு சட்டமூலம் தயாரிப்பது உகந்ததென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலத்திரனியல் தொடர்பாடல்களின் வளர்ச்சியால் தீவிரவாதக் குழுக்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் பயங்கரவாத செயற்பாடுகள், திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் சமூக விரோதச் செயல்களுக்காக இணையவெளி மற்றும் இலத்திரனியல் தொடர்பாடல்களைப் பயன்படுத்துவதற்கு தூண்டப்பட்டுள்ளனர்.
இணையத்தள பாதுகாப்பு மற்றும் அதற்கான நிறுவனக் கட்டமைப்பை உருவாக்குவது, தொழிநுட்ப அமைச்சின் விடயத்தலைப்பின் கீழ் காணப்படுகின்றது.
அதனால், முப்படையினர், பொலிஸ் மற்றும் ஏனைய பிரதிநிதித்துவ நிறுவனங்கள் தற்போது தத்தமது நிறுவன மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இணையத்தள பாதுகாப்பு அலகின் மூலம் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை மேலும் முறையான வகையிலும், வினைத்திறனாகவும் மேற்கொள்வதற்கு இயலுமான வகையில் தேவையான ஏற்பாடுகளை உள்வாங்கி தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கியதாக புதிய சட்டமொன்றை வகுப்பதற்கான தேவையேற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையவெளி மூலம் மேற்கொள்ளப்படும் இலத்திரனியல் தொடர்பாடல்கள் தேசிய பாதுகாப்புக்கு நேரடி விளைவுகளை ஏற்படுத்தும் காரணி எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
ஆகவே தேசிய பாதுகாப்புக்கு ஏற்புடைய விடயங்கள் தவிர்ந்த தேசிய தகவல்கள் மற்றும் இணையத்தள பாதுகாப்பு மூலோபாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒழுங்குபடுத்தல் சட்டம்மொன்றை தயாரித்தல், குறித்த பணிகளுக்காக ஏனைய பங்காளி நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதற்கான ஏற்பாடுகளை வகுத்தல், நாட்டில் தீர்மானம் மிக்க முக்கியமான தகவல்கள் தொடர்பான உட்கட்டமைப்பு வசதிகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான சட்ட ரீதியான ஏற்பாடுகளை அடையாளங் காணல், இணையத்தள பாதுகாப்புக்கு ஏற்படும் ஆபத்து நேர்வுகளுடன் கூடிய செயற்பாடுகளைத் தடுத்தல் மற்றும் நாட்டில் முறையான இணையத்தள பாதுகாப்புச் சூழலை உருவாக்குதல் போன்ற நோக்கங்களை அடைவதற்காகவே புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை ஏற்படுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.