சட்டத்தரணியின் கொலைக்கு பின்னர் சந்தேகநபர்கள் செய்துள்ள காரியம்
அக்குரேகொடவில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் இன்று (18) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளனர்.
கொலைக்குப் பிறகு சந்தேகநபர்கள் தங்கள் தொலைப்பேசிகளில் இருந்த தரவுகளை அழித்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை(13) தலங்கம, அக்குரேகொடவில் ஒரு சட்டத்தரணியும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கைதான சகோதரர்கள்
அதனைதொடர்ந்து, காவல் துறை மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், சம்பவம் குறித்து விசாரிக்க 12 காவல் குழுக்கள் நியமிக்கப்பட்டன.

அதன்படி, நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, மேற்கு மாகாண தெற்கு மாவட்ட குற்றப்பிரிவு, 16 ஆம் திகதி கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகளை கொண்டு சென்ற இரண்டு சகோதரர்களை கொட்டாவையில் கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பின்னர் இருவரும் நேற்று (17) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தபட்டனர், மேலும் இன்று வரை அவர்களை விசாரணைக்காக காவலில் வைக்க காவல்துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
வழங்கப்பட்ட துப்பாக்கி
இதற்கிடையில், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, பொல்கசோவிட்ட பகுதியைச் சேர்ந்த 'திலா' என்ற நபர் நேற்று (17) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகளில், சம்பந்தப்பட்ட இரண்டு இளைஞர்களும் அவரது அறிவுறுத்தலின் பேரில் துப்பாக்கிகளை கொண்டு சென்றதாகவும், 'திலா'வும் இந்த கொலை சம்பவத்தில் பங்கேற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |