ஆசிரியராக களமிறங்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில்!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அனுபவங்களைக் கற்றுக்கொள்வதற்கும் கேள்வி கேட்பதற்கும் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் ஒரு திட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சி செயல்படுத்தவுள்ளது.
அதன்படி, "ரணில் உடன் கற்றுக்கொள்" திட்டம் எதிர்வரும் மாதம் ஆரம்பிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் அணிதிரட்டலுக்கான பிரதிப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஹரின் பெர்னாண்டோ இன்று (10.11.2025) சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
"ரணில் உடன் கற்றுக்கொள்"
இதனைத்தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஹரின் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், "ரணில் உடன் கற்றுக்கொள்" திட்டம் எதிர்வரும் மாதம் ஆரம்பிக்கும்.
குறித்த நிகழ்வு இரண்டு மணி நேரம் நீடிக்கும், இளைஞர்கள் அழைக்கப்படுவார்கள். இதற்காக இளைஞர்கள் நிகழ்நிலையில் பதிவு செய்யலாம்.
அவர்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கேள்விகளைக் கேட்கலாம். அதனைத்தொடர்ந்து, மாதத்திற்கு ஒரு முறை ரணில் விக்ரமசிங்கவிடம் அரசியலைக் கற்றுக் கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்படும்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி இலங்கையின் முதலாவது முழுமையான டிஜிட்டல் கட்சியாக மாறும். கட்சி ஆதரவாளர்கள் நிகழ்நிலையில் கட்சியுடன் இணையலாம்" என ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் அரசியல் அனுபவத்தைக் கொண்டுள்ளார். 1977 முதல் 2020 ஆம் ஆண்டு வரையில் தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியதுடன் ஐந்து தடவைகளுக்கும் அதிகமாக பிரதமராகப் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |