முதலாம் தரத்திற்கான கற்றல் நடவடிக்கை : கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு
2026 ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கான கற்றல் நடவடிக்கைகளை ஜனவரி 20 ஆம் திகதி ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு (Ministry of Education) அறிவித்துள்ளது.
அத்துடன் அந்தத் தினத்திற்கு முன்னர் தரம் ஒன்றுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களைப் பாடசாலைக்கு அனுமதிக்க வேண்டும் என அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
2026 ஜனவரி 20 ஆம் திகதியன்று தரம் ஒன்று மாணவர்களுக்கு முறையாக வகுப்புக்களை ஆரம்பிப்பதற்குரிய வரவேற்பு நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மாணவர்களை வரவேற்றல்
இந்தநிலையில் குறித்த நிகழ்ச்சி நிரல் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
01. தரம் இரண்டைச் சேர்ந்த மாணவர்களைக் கொண்டு புதிய மாணவர்களை வரவேற்றல்.
02. பெற்றோர் மற்றும் விருந்தினர்களை வரவேற்றல், தேசிய மற்றும் பாடசாலை கொடியேற்றம், தேசிய கீதம் மற்றும் பாடசாலை கீதம் இசைத்தல்.
03. ஆரம்பக் கல்வி மறுசீரமைப்பு, தரம் ஒன்றின் புதிய கலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் நோக்கம் மற்றும் குறிக்கோள்கள் தொடர்பில் தரம் ஒன்றில் அனுமதிக்கப்படும் மாணவர்களது பெற்றோர்களை அறியப்படுத்துதல்.
04. புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சியினை ஆரம்ப பிரிவு மாணவர்களது பங்கேற்புடன் கலை நிகழ்ச்சியாக நடத்துதல்.
05. புதிய மாணவர்களுக்கு முன்னுரிமையளிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும் என்பதுடன், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு எந்தவொரு அசௌகரியங்களும் ஏற்படாத வகையில் நிகழ்ச்சியினை ஒழுங்கு செய்வது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
புதிய கல்வி மறுசீரமைப்பு
06. இந்த நிகழ்ச்சியினை வெற்றிகரமாக நடத்துவதற்காகப் பாடசாலையின் அனைத்துப் பிரிவுகள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கம் உட்பட அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு மற்றும் பங்கேற்பினைப் பெற்றுக் கொள்வது பொருத்தமாகும்.
07. அவ்வாறே தரம் ஒன்றில் அனுமதிக்கப்படும் மாணவர்களுக்காக புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள பிள்ளைகளை இனங்காணல் நிகழ்ச்சித்திட்டத்தை (ஆரம்ப பாடசாலைக்கு மகிழ்ச்சிகரமானதோர் ஆரம்பம்) 2026 ஜனவரி மாதம் 02ம் திகதி முதல் 2026 ஜனவரி 16ம் திகதி வரையில் (அரச விடுமுறை தினங்கள் தவிர்த்து) தேசிய கல்வி நிறுவகத்தினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கமைய நடைமுறைப்படுத்த வேண்டும்.
08. பிள்ளைகளை இனங்காணும் நிகழ்ச்சித்திட்டத்தின் பின்னர் பாடசாலைக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்காகவும் மேற்படி இலக்கம் 05 ற்குரிய செயற்பாடுகளை நெகிழ்வுத் தன்மையுடன் மேற்கொள்ளுமாறு தரம் ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.
எனவே இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு, உரிய தரப்பிடம் இருந்து ஒத்துழைப்பை கல்வியமைச்சு எதிர்பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
