யாழ். மக்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடு: எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவுகள்
யாழ். மாவட்டத்தின் திண்மக் கழிவு அகற்றல், வளி மாசடைதல், பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் ஒலிபெருக்கிகளை கட்டுப்படுத்தல் போன்ற விடயங்கள் குறித்து தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம் சுற்றாடல் பாதுகாப்பு குழு கூட்டம் இடம்பெற்ற போது குறித்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் இவ்வாறு கருத்து தெரிவித்தார், “குறிப்பாக ஆலயங்கள் மற்றும் வேறு நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளால் அசௌகரியங்கள் ஏற்படுவதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
சட்டநடவடிக்கை
ஆலயங்களில் உங்களது சமய நிகழ்வுகளின்போது ஒலிபெருக்கிகளை பயன்படுத்தும்போது அயலில் உள்ளவர்கள், மாணவர்கள் மற்றும் வயோதிபர்களுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் உங்களது ஒலிபெருக்கிகளை பயன்படுத்துங்கள்.
ஆலயங்கள் அமைந்துள்ள பகுதியில் இருந்து மிகவும் தொலைவில் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டு அதிக ஒலி எழுப்பப்படுகிறது.
ஆகவே உங்களது ஆலயங்களில் எழுப்பப்படும் ஒலிபெருக்கி ஒலிகள் மூலம் ஏனையோருக்கு இடையூறு ஏற்படா வண்ணம் செயற்படுமாறு ஆலய நிர்வாகத்தினர் அல்லது தர்மகர்த்தாக்களை கேட்டுக் கொள்கிறேன்.
குறிப்பாக இரவு வேளைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்த ஒலிபெருக்கி மூலம் இடையூறு ஏற்படுவதை நாங்கள் அறிந்திருக்கின்றோம், ஆகவே இதற்கு எதிராக நாங்கள் சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
காவல்துறையினருக்கு அறிவிப்பு
எத்தனை டெசிமல் அளவில் ஒலிபெருக்கியை பயன்படுத்த வேண்டும் என்ற வரையறை உள்ளது. ஆகவே இதனை கட்டுப்படுத்தக்கூடிய வல்லமை காவல்துறையினருக்கு உள்ளது. இது குறித்து எழுத்து மூலம் காவல்துறையினருக்கு அறிவித்துள்ளோம்.
இவ்வாறு அசௌகரியங்கள் ஏற்படும் பட்சத்தில் பொதுமக்கள் உங்களுடைய முறைப்பாடுகளை பிரதேச செயலகங்களுக்கு தெரிவிப்பதன் மூலம், பிரதேச செயலர்கள் அதனை உடனடியாக காவல்துறையினரின் கவனத்துக்கு கொண்டுவந்து அந்த ஒலியின் அளவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
எனவே அந்த ஒலியினால் ஏனையோருக்கு இடையூறு ஏற்படா வண்ணம் செய்யப்படும்போது ஏனையோருக்கும் பிரச்சினைகள் ஏற்படாது.”என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |