லியோ திரைப்படத்தை திரையிட வேண்டாம் : விஜய்க்கான கடிதத்தால் புதிய சர்ச்சை
தமிழர் தாயகப் பகுதியான வடக்கு கிழக்கில் நாளை மறுதினம்(20) முன்னெடுக்கப்படவுள்ள பொதுமுடக்கத்தை முன்னிட்டு முன்னணி நடிகர் விஜய்யின் திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்துவதாக வெளியான கடிதம் போலியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடியான முறையில் கட்சித் தலைவர்களின் கையெழுத்துக்களுடன் இந்தக் கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
பொதுமுடக்க போராட்டத்திற்கான அழைப்பு
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவிற்கு சிறிலங்கா அரச தரப்பினரால் விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தும் நடவடிக்கைக்கு நீதி கோரி தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கில் நாளை மறுதினம் 20 ஆம் திகதி தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எட்டு தமிழ் கட்சிகளும் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு கட்சிகளும் இணைந்து பொதுமுடக்க போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
இந்த நிலையில் இந்தப் போராட்டத்தை காரணம் காட்டி, உலக நாடுகளைப் போன்று இலங்கையிலும் நாளை திரையிடப்படவுள்ள விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தை வெளியிடுவதை பிற்போடுமாறு நடிகர் விஜய்யிடம் கோரிக்கை விடுக்கும் கடிதமொன்று சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது.
லியோ திரைப்படத்தை காட்சிப்படுத்துவதானது போராட்டத்திற்கு பின்னடைவாக அமையும் என்பதுடன், அது ஈழத் தமிழர்களை அவமதிக்கும் செயற்படாக இருக்கும் எனவும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
லியோ திரைப்படத்தின் காட்சி
ஈழத் தமிழர்களுடன் மிக நெருக்கமான தொடர்புகளை கொண்டவராக இருப்பதன் அடிப்படையில் லியோ திரைப்படத்தின் காட்சிகளை சிறிலங்காவில் எதிர்வரும் 20 ஆம் திகதி நிறுத்தி வைக்குமாறு நடிகர் விஜய்யிடம் கேட்டுக்கொள்வதாக அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட்டின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என்.சிறீகாந்தா ஆகியோரின் கையொப்பங்கள் இடம்பெற்றுள்ளன.
இலக்கம் 30 மார்ட்டின் வீதி, யாழ்ப்பாணம் என முகவரியிடப்பட்ட இந்தக் கடிதமானது 16 ஆம் திகதி, திகதியிட்டிருக்கும் நிலையில், இந்தக் கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு, தமிழ் நாட்டின் ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.
எனினும் அவ்வாறான ஒரு கடிதத்தை தாம் அனுப்பவில்லை என போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள தமிழ் தேசிய கட்சிகள் விளக்கமளித்துள்ளன.
இது போராட்டத்தை திசைதிருப்பி, அதனை மழுங்கடிக்கும் நோக்குடன் திட்டமிட்டு இவ்வாறான கடிதம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அந்த கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.