"போராடுவோம் உழைப்பிற்கேற்ற ஊதியம் வேண்டும்" : முன்பள்ளி ஆசிரியர் சங்கம் போராட்டம்
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு அதிகரித்தல் மற்றும் நிரந்தர நியமனம் தொடர்பாக வடமாகாண முன்பள்ளி ஆசிரியர் சங்கம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில்,
"யாழ்ப்பாண மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் சுமார் 30 வருடங்களுக்கு மேல் கடமையாற்றி வருகின்றோம்.
ஆசிரியர்களுக்கான கல்வித்தகைமை கா.பொ.த உயர் தரம், முன்பள்ளி டிப்ளோமா, தேசிய தொழில் தகைமை மட்டம் 4 ( NVQ 4) என்பவற்றை பூர்த்தி செய்துள்ளோம்.
அத்துடன் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் வழங்கப்படும் அனைத்து பயிற்சிகளிலும் பங்குபற்றி வருகின்றோம். வடமாகாண கல்வி அமைச்சினால் வழங்கப்படும் பாடத்திட்டத்தை ஆரம்பப்பிரிவு கலைத்திட்டம் போன்றே செயற்படுத்தி வருகின்றோம்.
அதுமட்டுமல்லாது ஏனைய அரச நியமனம் பெற்ற ஆசிரியர்களைப் போன்று காலை 7.30 மணி தொடக்கம் பிற்பகல் 12.30 மணி வரை எமது சேவையை வழங்கி வருகின்றோம். அத்தோடு முன்பள்ளி சிறார்களுக்கான மேலதிக பயிற்சிகளையும் முன்பள்ளியின் அனைத்து செயற்பாடுகளையும் தொடர்ச்சியாகச் செய்து வருகின்றோம்.
எமது முழுமையான நேரத்தையும் முன்பள்ளிக்காகவே செலவிடுகின்றோம். வடமாகாணத்தில் மொத்த ஆசிரியர்கள் 3152 பேர் உள்ளனர். இதில் சிவில் பாதுகாப்பு திணைக்கள ஆசிரியர்கள் (CSD) 310பேர் உள்ளனர். இவர்களுக்கான சம்பளம் 42,000ரூபா மிகுதியான 2800 ஆசிரியர்கள் வடமாகாண கல்வி அமைச்சினால் வெறுமனே 6,000ரூபா பெறும் ஆசிரியர்களாகவே உள்ளனர்.
இருப்பினும் இதுவரையிலும் எங்களுக்கான முழுமையான அரச அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதனால் எமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்து செல்வதற்கு பொருளாதார ரீதியில் மிகவும் இடர்பாடுகளை சந்திக்கின்றோம். ஏனெனில் முன்பள்ளி ஆசிரியர்களாக கடமையாற்றுபவர்கள் அநேகமானோர் வறுமைக்கோட்டிற்குள் வாழ்பவர்களாகவும் பெண் தலைமைத்துவத்தினை கொண்டவர்களாகவும் இருக்கின்றோம்.
எங்களுக்கான நியமனம் வழங்குவதற்கான சந்தர்ப்பங்கள் பல இருந்தும் அது எமக்கு கிடைக்கவில்லை. உதாரணமாக ஒரு லட்சம் வேலை வாய்ப்பு, நூற்றைம்பது நாள் வேலைத்திட்டம், தொண்டர் ஆசிரியர் நியமனம், உள்ளுராச்சி திணைக்களத்தினால் வழங்கப்பட்ட முன்பள்ளி வேலைவாய்ப்பு எவற்றிலும் எம்மை உள்வாங்கவில்லை.
இவ்வாறான நிலைமையினால் மனஅழுத்தத்திற்கு உள்ளானோம் இதன் காரணமாக மன்னார் மாவட்ட முன்பள்ளி ஆசிரியர் சங்கமானது நிரந்தர நியமனம் தொடர்பான முயற்சியை முன்னெடுத்து வருகின்றது" என தெரிவித்துள்ளனர்.







