வவுனியாவில் ஆரம்பமான வாக்குப் பெட்டி விநியோகம்
வவுனியா (Vavuniya) மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் காவல்துறையினரின் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
வவுனியா மாவட்டச்செயலகத்தில் இருந்து இன்று (05) காலை முதல் குறித்த வாக்குப்பெட்டிகள் அனுப்பப்பட்டுள்ளன.
வாக்களிப்பு நிலையங்கள்
அத்துடன் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 154 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குச்சீட்டுக்கள், மற்றும் ஏனைய தேவையாண ஆவணங்கள் என்பனவும் எடுத்துச்செல்லப்பட்டுள்ளன.
இதேவேளை நாளை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் வவுனியா மாவட்டத்தில் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் 1,605 உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும், அரச அதிபருமான பீ.ஏ.சரத்சந்திர தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் ஒரு மாநகரசபை மற்றும் நான்கு பிரதேச சபைகளுக்காக 103 பேர் தெரிவு செய்யப்படுவதற்காக 1,731 பேர் போட்டியிடுகின்றனர்.
ஒரு இலட்சத்து 79 ஆயிரத்து 293 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
மன்னாரில் 114 வாக்களிப்பு நிலையங்கள்
மன்னார் (Mannar) மாவட்டத்தில் உள்ள 05 உள்ளூராட்சி சபைகளுக்குமான வாக்குப் பெட்டிகள் இன்று (5) காலை 11 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இருந்து பலத்த காவல்துறை பாதுகாப்புடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மன்னார் நகர சபை, மன்னார், மாந்தை மேற்கு, நானாட்டான், முசலி ஆகிய பிரதேச சபைகள் உள்ளடங்கலாக 5 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்குப் பெட்டிகள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் ஐந்து சபைகளில் 103 உறுப்பினர்களை தெரிவு செய்ய 114 வாக்களிப்பு நிலையங்களில் 91,373 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






