சிறிலங்கா இராணுவம் மடு தேவாலயத்தில் அரங்கேற்றிய படுகொலைகளின் 23 வது ஆண்டு நினைவு இன்று!
உலகம் போர்வெறி பிடித்து ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கிறது அது ஆக்கிரமிப்பு குணங்கொண்டவர்களுக்கும் தமது இருப்பிற்காகவும் உரிமைக்காகவும் போராடுபவர்களுக்கிடையேயும் ஒரு தவிர்க்க முடியாத நிகழ்வாக பரந்து விரிந்த இந்த உலகத்தின் பல பாகங்களிலும் இன்றுவரை நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.
அவ்வாறாக நடந்துகொண்டிருக்கும் போர்களில் ஈடுபடும் இருதரப்பினையும் தாண்டி அதிக அளவில் பாதிக்கப்படுவது அப்பாவிப்பொதுமக்களே,
அவ்வாறு பாதிக்கப்படும் மனித உயிர் விலைமதிப்பற்றது , மனித உடலங்களும் அவ்வாறானதே , ஏனைய நாடுகளில் ஏற்பட்டதைக்காட்டிலும் காலத்தின் கணக்கெடுப்பில் நடந்து முடிந்து போன சம்பவங்களின் பட்டியலை சரி பார்க்கின்றபோது ஈழத்தமிழர்களின் வாழ்க்கை மட்டும் வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத வரலாற்று துயரங்களை ஏந்தியே நிற்கிறது.
தமிழர்கள் தமது பூர்வீக நிலத்தையும் அதன் மீதான உரிமைகளையும் கோரி இலங்கையின் சிங்களவர்களோடு போராட ஆரம்பித்த கடந்த 70 ஆவது ஆண்டுகளில் ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட மிக மிலேச்சத்தனமான படுகொலைகள் ஏராளம்.
அந்த பட்டியலில் கடந்த 1999 ம் வருடம் இதேபோன்றதொரு நாளில் இடம்பெற்ற மன்னார் மடுத்தேவாலைய படுகொலைகள் மிக முக்கியமானவை.
போரும் யுத்தமும் தவிர்க்கப்பட வேண்டிய இடங்களில் வைத்தியசாலைக்போலவே ஆலயங்களும் மிக முக்கியமானவை யுத்த சூனிய வலயங்களாக உலக அளவில் குறிப்பிடப்படும் ஆலயங்களில் அகதியான பொது மக்கள் தஞ்சமடைவது வழமையானதாக இருக்கும்.
ஆனால் அன்றைய இலங்கையின் சந்திரிக்கா அரசு மேற்கொண்ட தாக்குதல்களில் பெரும்பாலானவை ஆலயங்களாகவும் அகதிகள் முகாம்களாகவுமே இருந்தமை சர்வதேச அளவில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
நினைவுகளில் இன்றவரை நிரம்பி நீளும் இந்த கொடுமான உயிர்ப் பறிப்புச் சம்பவங்கள் எத்தனை முறை தேற்ற நினைத்தாலும் மறந்து போக முடியாத கொடூரமொன்றின் நினைவாக நமது விழித்திரைகளில் பரவிநிற்கிறது.
மனித உயிர்களின் மகத்துவம் மதிக்கப்படாத போரின் கொடூரம் மடு ஆலயத்தை கொன்று தீர்த்து இன்றோடு 23 ஆண்டுகள் ஆகிறது.
ஏற்றுக்கொள்ளவே முடியாத இந்த படுகொலைச்சம்பவத்தில் தமது உயிர்களை இழந்த அத்தனை உறவுகளையும் ஈழத்தமிழர்களின் வரலாற்று வலிகளை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் Ibc தமிழ் இன்றைய நாளில் நினைவேந்துகிறது