மட்டக்களப்பு உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை
மொனராகலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கையானது இன்று (28) இரவு 11.30 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பின்படி, இந்த மூன்று மாவட்டங்களிலும் பல இடங்களில் கடுமையான மின்னல் மற்றம் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மக்களுக்கான அறிவுறுத்தல்
இடியுடன் கூடிய மழையின்போது, குறிப்பிட்ட சில பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னலால் ஏற்படக்கூடிய சேதங்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இடியுடன் கூடிய மழையின்போது மக்கள் வீட்டிற்குள் தஞ்சம் புகுமாறும், மரங்களின் கீழ் தஞ்சம் அடைவதைத் தவிர்க்குமாறும் நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் திறந்த நீர்நிலைகள் உள்ளிட்ட திறந்தவெளிப் பகுதிகளிலிருந்து விலகி இருக்குமாறும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் கம்பிவழித் தொலைபேசிகள் மற்றும் மின்சாரத்துடன் இணைக்கப்பட்ட மின்சாதனங்களைப் பயன்படுத்துவதையும், மிதிவண்டிகள், டிராக்டர்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களையும் தவிர்க்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
விழுந்த மரங்கள் மற்றும் மின்கம்பிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், அவசர உதவிக்காக உள்ளூர் பேரிடர் மேலாண்மை அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளுமாறும் குடியிருப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |