ஆந்திரப் பிரதேசம் கரையை கடக்கும் அர்னாப் புயல் : இலங்கையின் வானிலையில் மாற்றம்
வங்காள விரிகுடாவின் மேற்கு மத்திய பகுதியில் நிலைகொண்டிருந்த ‘அர்னாப்’ புயல், தற்போது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் கரையைக் கடந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால், இலங்கையின் வானிலையில் ஏற்பட்டிருந்த புயலின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருவதாக அந்தத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை
ஊவா மாகாணத்திலும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கம் மற்றும் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்றினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |