திருச்சி முகாமிலிருந்து நாடு திரும்பிய இலங்கை தமிழருக்கு 72 மணி நேர தடுப்புக்காவல்
புதிய இணைப்பு
திருச்சி தடுப்பு முகாமிலிந்து இலங்கைக்கு நாடு திரும்பிய கிருஷ்ணகுமார் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் 72 மணி நேரக் காவல் உத்தரவைப் TID பெற்றுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் TID விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2015-ஆம் ஆண்டில் இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர், இந்திய நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து, அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தனது சிறைத் தண்டனையை நிறைவு செய்ததையடுத்து, அவரை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அதன்படி, அவர் நேற்று இரவு (26) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.
முதலாம் இணைப்பு
திருச்சி தடுப்பு முகாமிலிந்து இலங்கைக்கு நாடு திரும்பிய கிருஷ்ணகுமார் என்பவர் TID விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் இலங்கைக்குத் திரும்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்த கிருஷ்ணகுமார் , நேற்று (26.10.2026) மாலை இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் சமூக ஆர்வலர் ரஜீவ் காந்த் தனது முகநூலில் தெரிவித்துள்ளதாவது,
“2009 ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய சூழ்நிலை காரணமாக இலங்கையை விட்டு வெளியேறிய கிருஷ்ணகுமார், இந்தியாவின் திருச்சி தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
2015 ஆம் ஆண்டளவில் இந்தியாவில் அவருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கொன்றில் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
அந்தத் தண்டனைக் காலம் நிறைவடைந்த பின்னரும் பல ஆண்டுகளாக அவர் தடுப்பில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், மீண்டும் இலங்கைக்குத் திரும்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்த கிருஷ்ணகுமார், நேற்று மாலை இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.
நேற்று மாலை சுமார் 4 மணியளவில் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்தியாவிலிருந்து புறப்பட்ட அவர், புறப்படுவதற்கு முன்னர் என்னைத் தொடர்புகொண்டு தான் இலங்கைக்கு வருவதாகத் தெரிவித்திருந்தார்.
மாலை சுமார் 5.45 முதல் 6 மணிக்குள் அவர் இலங்கையை வந்தடைந்திருக்க வேண்டும் ஆனால் அதன் பின்னர் அவரிடமிருந்து எந்தவிதமான தொடர்பும் கிடைக்கவில்லை.
அவரது குடும்பத்தினருக்கும் அவர் எங்கிருக்கிறார் என்பது தொடர்பாக எந்தத் தகவலும் வழங்கப்படவில்லை.
வெளிநாடுகளில், குறிப்பாக இந்தியாவில் அகதிகளாகவும் தடுப்பு முகாம்களிலும் வாழ்ந்துவரும் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்குத் திரும்புமாறு இலங்கை அரசு பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பலத்த கேள்வி எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |