இலங்கையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சட்டமூலத்துக்கு சர்வதேச மன்னிப்பு சபை கடும் எதிர்ப்பு!
முன்மொழியப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச மன்னிப்பு சபை அழைப்பு விடுத்துள்ளதுடன், அது அதிகாரிகளுக்கு வரம்பற்ற அதிகாரங்களை வழங்கி அடிப்படை மனித உரிமைகளைப் பலவீனப்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை (27) அன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், சர்வதேச மன்னிப்பு சபை , முன்மொழியப்பட்ட இந்தச் சட்டத்தை, தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட மிகவும் கவலைக்குரிய சட்டங்களில் ஒன்றாக விவரித்துள்ளது.
இந்த சட்டமூலமானது , சந்தேக நபர்களை விசாரணையின்றி இரண்டு ஆண்டுகள் வரை காவலில் வைக்கவும், உயர் காவல்துறை அதிகாரிகளிடம் அளிக்கப்பட்ட வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் ஆதாரமாகப் பயன்படுத்தவும், நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்த ஊடகங்களின் செய்தியறிக்கையைக் கட்டுப்படுத்தவும் வழிவகுக்கும் என எச்சரித்துள்ளது.
பிடியாணையின்றி சோதனை
பிடியாணையின்றி சோதனைகளை நடத்துவதற்கும், நீதிமன்ற உத்தரவின்றி தொலைபேசி பதிவுகள், சந்தாதாரர் அடையாளங்கள் மற்றும் சாதன இருப்பிடத் தரவுகள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களைப் பெறுவதற்கும் காவல்துறையை அனுமதிக்கும் விதிகள் குறித்தும் அது கவலைகளை எழுப்பியது.

"தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட தொடர்ச்சியான அடக்குமுறைச் சட்டங்களில், இந்த அசாதாரண மசோதாவே மிகவும் கவலையளிப்பதாக உள்ளது.
இது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் (PTA) மிக மோசமான அம்சங்களில் பெரும்பாலானவற்றை மீண்டும் அறிமுகப்படுத்தி, அவற்றை பரந்த அளவிலான குற்றங்களுக்குப் பயன்படுத்துகிறது," என்று சர்வதேச மன்னிப்பு சபை தெற்காசிய இயக்குநர் ஸ்மிருதி சிங் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |